தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்துபவர்களை தமிழக அரசு அனுமதிக்கிறதா?- அண்ணாமலை கேள்வி

சென்னை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும் போற்றி மதிக்கிறது.
ஆனால் கீழ்த்தரமான சிந்தனைகளால், ஆளும் கட்சியின் ஆதரவுடன், சிலர் தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை சிதைப்பதை, அவமானப்படுத்துவதை, தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது? 
மதகோட்பாடுகள் மற்றும் இறை நம்பிக்கையை அவதூறாக பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே திராவிட மாடலாக சிலர் கொண்டுள்ளனர்.
பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும்,பண்பாட்டையும் தொடர்ந்து இழிவுபடுத்துவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களை இந்த அரசு அனுமதிக்கிறதா?
மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், எப்படி காவல் துறையால் கைது செய்யப்படாமல் துணிச்சலாக தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் எப்படி ஈடுபடுகிறார்கள்? 
ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது போன்ற அவதூறுகளைக் கண்டு கொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?
நடவடிக்கை எடுக்க தேவையான காலம், அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன்? அல்லது இச்சமூகத்தின் சகிப்புத்தன்மையைக் கண்டறிய இது நீங்கள் தேர்ந்தெடுத்த வழியா?
தவறு செய்தவர்கள் உடனடியாக சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.  அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களின் வாழ்வியலோடு கலந்து இருக்கும் தெய்வீகத்தை அவமதிப்பதை பாஜக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.