அறிவை நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க கவர்னர் அழைப்பு| Dinamalar

பெங்களூரு:”இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாகும். மனித நேயத்தை உள்ளடக்கிய அறிவை, மாணவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்,” என கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசினார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 56வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று பேசியதாவது:நம் நாட்டின் கலாச்சாரம், கண்ணியம், பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவை உலகிலேயே மிக உயர்ந்தவை. அதை மேலும் முன்னெடுத்து செல்வதன் மூலம், சுயசார்பு இந்தியாவையும், வலிமையான இந்தியாவையும் உருவாக்கும் பொறுப்பை நீங்களும், இளைய தலைமுறையினரும் ஏற்க வேண்டும்.
இப்பல்கலைக்கழகத்தில் பெறப்படும் தரமான கல்வி மற்றும் வலுவான நெறிமுறை அடித்தளம் தான் உங்கள் வாழ்க்கையை வெற்றியடைய செய்து, முன்னேற உதவும். பெங்களூரு பல்கலைக்கழகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயர்கல்வியை அடையவும், விரிவு படுத்தவும், சிறந்து விளங்கவும் பாடுபடுகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் படித்த பலர் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பயின்ற பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்ற பெரியவர்களால் இன்றைய மாணவர்கள் ஈர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், ‘இஸ்கான்’ தலைவர் மதுபண்டித் தாஸ், கலைஞர் சமூக ஆர்வலர் வாசுதேவ், முத்துராஜிக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தை கவர்னர் வழங்கினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.