இந்திய மாணவர்கள் படிப்பை தொடர சீனா அனுமதி| Dinamalar

பீஜிங் : ‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக படிப்பை தொடர முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு, மீண்டும் சீனா திரும்ப அனுமதி வழங்கப்படும்’ என, அந்நாடு அறிவித்துள்ளது.

கடந்த, 2019ல் கொரோனா பரவலை தடுக்க சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சர்வதேச விமான சேவைகளும், இந்தியர்களுக்கு ‘விசா’ வழங்குவதும் நிறுத்தப்பட்டன. இதனால், சீனாவில் இருந்து இந்தியா வந்த மாணவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, மீண்டும் சீனா சென்று படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருசிலர் ‘ஆன்லைன்’ வாயிலாக படித்து வருகின்றனர்.

இந்த வகையில், சீனாவில் படித்து வந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், மீண்டும் அங்கு செல்ல முடியாமல் இந்தியாவில் சிக்கிஉள்ளனர். இவர்கள் மீண்டும் சீனாவில் படிப்பை தொடருவது தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு துறை அமைச்சர், வாங் யி உடன் பேசினார். இதையடுத்து இந்திய மாணவர்களில் சிலர் மீண்டும் சீனா வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:இந்திய மாணவர்களின் கவலைக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்கள் மீண்டும் சீனா வந்து படிப்பை தொடருவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்தியா, மாணவர்களின் விபரங்களை வழங்கினால், அவற்றை பரிசீலித்து தகுதியுள்ள மாணவர்களுக்கு விசா வழங்கப்படும்.

சீனா வரும் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து சீனாவில் கல்வி பயின்று தற்போது இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்களின் விபரங்களை இந்திய துாதரகம் சேகரிக்கத் துவங்கியுள்ளது. மே 8ம் தேதிக்குள், இந்த மாணவர்கள் https://forms.gle/MJmgByc7BrJj9MPv7 என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என, இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.