மெய்நிகர் விசாரணையை அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: மெய்நிகர் நீதிமன்ற விசாரணையை வழக்கு தொடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.கொரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதும் நீதிமன்றங்கள் காணொலி வாயிலாக மெய்நிகர் முறையில் செயல்பட்டு வந்தன. தற்போது, தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெய்நிகர் நீதிமன்ற விசாரணை வழக்கு தொடுப்பவர்களுக்கு அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, மனுதாரர் தரப்பு வக்கீல், நீதிபதிகள் நாகேஸ்வரராவ், நரசிம்மா ஆகியோர் அமர்வில் முன்பு நேற்று முறையிட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘நீதிமன்றங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. நாங்கள் ஏற்கனவே நேரடி மற்றும் காணொலி என இரண்டும் கலந்த விசாரணை முறையை சோதித்து பார்த்துள்ளோம். அது எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை.  மெய்நிகர் விசாரணையில் பல சிக்கல்களும் உள்ளன. எனவே, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. ஒருவேளை தொற்று அதிகமாகி நிலைமை மோசமானால் பார்ப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.