ஹிந்தி நடிகர்களுக்கு ராம்கோபால் வர்மா சவால்

தென்னிந்தியத் திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பல கோடி வசூலை அள்ளி வருகிறது. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் மட்டுமே ஹிந்தியில் சுமார் 900 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இது ஹிந்தி நடிகர்களுக்கு ஒரு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

அதன் வெளிப்பாடாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்த கருத்திற்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவன், ஏன் தென்னிந்தியப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள் எனக் கேட்டிருந்தார். இதற்கு பிரபல இயக்குனராக ராம்கோபால் வர்மா ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மேலும் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். “இதற்கு முன்பாக ஹிந்தியில் தயாரான 'மைனே பியார் கியா, ஹம் ஆகே ஹை கோன், டங்கல்' ஆகிய படங்கள் மற்ற மாநிலங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலைப் பெற்றது. ஆனால், அந்த மாநிலப் படங்கள் அளவிற்கு அவற்றால் வசூல் செய்ய முடியவில்லை.

கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா ஆகிய படங்கள் ஹிந்தியில் மட்டும் டப்பிங் செய்யப்படவில்லை. தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இது அந்தந்த தயாரிப்பாளர்களைப் பொறுத்தது. படம் எந்த அளவிற்கு போய் சேரும் என்பதைப் பொறுத்தே செய்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களை உலக அளவில் பல மொழிகளில் டப்பிங் செய்கிறார்கள். சமீபத்தில் வந்த ஸ்பைடர் மேன் படத்தை இந்திய அளவில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்தனர்.

தற்போது கன்னட டப்பிங், தெலுங்கு டப்பிங் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு ஹிந்திப் படங்களைக் காட்டிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெறுவது பாலிவுட்டிற்கு ஷாக் ஆக உள்ளது. மக்கள் அந்தப் படங்கள் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்ப்பதில்லை, படம் எப்படியிருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள்.

இப்படி மொழியால் சண்டையிட்டுக் கொள்வதை விட நட்சத்திரங்களுக்குள் இயக்குனர்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டியை வளர்த்துக் கொள்ளட்டும். ரசிகர்களும் எங்கிருந்து வந்தாலும் பலவிதமான படங்களை ரசிக்கும் ரசனையைப் பெறுவார்கள். இந்திய மக்கள் எது சிறந்தது, யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்யட்டும்.

மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் பிரபாஸ், யஷ், ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் பாலிவுட்டிற்குச் சென்று அங்குள்ள ஹிந்தி ஸ்டார்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அக்ஷய்குமார், அஜய் தேவகன், ஜான் ஆபிரகாம் ஆகியோரது வெற்றியைத் தகர்த்துவிட்டனர்.

ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அக்ஷய்குமார், அஜய் தேவகன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோருக்கு ஒரு சவால். அவர்கள் தங்களது ஹிந்திப் படங்களை தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து பிரபாஸ், யஷ், ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோரது வெற்றியைத் தகர்த்து அவர்களது ஹிந்திப் படங்கள் அதிக வசூலைப் பெறச் செய்யட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலுக்கு ஹிந்தி ஸ்டார்கள் முன் வருவார்களா ?.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.