சென்னை: அரசுக் கல்லூரிகள் அமைப்பதில் முதல்வர், கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில், உசிலம்பட்டி தொகுதி உறுப்பினர் பி.அய்யப்பன், வேப்பனஹள்ளி உறுப்பினர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் தங்கள் தொகுதியில் அரசுக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
31 கல்லூரிகள்
தமிழகத்தில் 10 மாதங்களில் 31 கல்லூரிகள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கல்லூரியே இல்லாத தொகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதேநேரம், எதிர்வரிசையில் இருக்கும் உறுப்பினர்கள் கேட்டாலும், கல்லூரி தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக அரசியல் பாகுபாடின்றி முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ், பாஜக, மனிதநேயமக்கள் கட்சி உறுப்பினர்கள் கேட்டபோது மணப்பாறையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர்கள் கேட்ட இடங்களிலும் புதிதாக கல்லூரிகள்தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரியில் ஷிப்ட் முறை
கல்லூரிகளில் ஷிப்ட் முறை தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஷிப்ட் முறையை அறிமுகப்படுத்தியதே முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். தற்போது, காலை ஷிப்ட்டில் மாணவிகள், பிற்பகல் ஷிப்ட்டில் மாணவர்களை வரவைப்பது குறித்து முதல்வர் உத்தரவின்பேரில் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.