புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் பாரதிராஜா கனடாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மனோன்மணியின் ஒரு மகளுக்கு காரைக்குடியில் மார்ச் மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண விழா காரைக்குடியில் நடந்ததால், முதல் நாளான 5-ம் தேதி இரவே புதுக்கோட்டையில் உள்ள தங்கள் வீட்டினை பூட்டிவிட்டு காரைக்குடி சென்றிருக்கிறனர். திருமணம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறை மற்றும் பீரோவில் திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 121 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த நகர போலீஸார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர். மகளுக்கு திருமணம் எனில், நகைகளை ஏன் இங்கு வைத்து சென்றீர்கள் என்பது குறித்த கேள்விகளை போலீஸார் எழுப்பினர்.
அப்போது அந்தக் குடும்பத்தினர், “நகைகளை அதிகமாக போட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது, எதிர்பார்க்காத விதமாக களவு போவதற்கு வாய்ப்பிருக்கு. அப்படி ஆகக்கூடாதுன்னு தான் கவரிங் நகைகளைப் போட்டுக்கிட்டு, வீட்டிலேயே பத்திரமாக தங்க நகைகளை வச்சிட்டுப்போனோம்” என்று சொல்லியிருக்காங்க. போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக, தொடர் விசாரணை நடத்தி வந்தனர். தொடர் விசாரணையின் பலனாக திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருமண வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த சிவராஜன், தங்கபாண்டி மற்றும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் எ ஸ்டீபன் ஆகிய மூன்று பேரையும் நகர போலீஸர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 60 பவுன் மதிப்பிலான தங்கக் கட்டிகளையும், நகை மதிப்பீடு மிஷின், கார், டூவிலர்களை மீட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “சிவராஜன், சதீஷ் இருவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீடு எடுத்து தங்கி ஆங்காங்கே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். தங்கபாண்டி என்பவர் இந்த 2 பேருக்கும் நண்பர். சிறையில் இருக்கும் போது தான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைதான 3 பேரும் சம்பவத்தன்று திருமணத்திற்காக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளால் துப்பு கிடைத்தது.
கைதான 3 பேரும் நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். சில பவுன் நகைகளை அடகு வைத்தும் பணம் பெற்றுள்ளனர். அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றனர்.