மே 1. தொழிலாளர்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுமையும் தொழிலாளர் சமூகம் கொண்டாடி மகிழ்கின்றது என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல, பல நூற்றாண்டுகளாக, அமெரிக்கச் சந்தைகளில், மனிதர்களை விலைக்கு வாங்கிச் சென்று, கொட்டகைகளில் அடைத்து வைத்து, நேரம் காலம் பார்க்காமல் வேலை வாங்கினர். அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தனர். அடிமைகள் மனிதர்கள் அல்ல… அவர்கள், முதலாளிகளின் உடைமைப் பொருளாகவே கருதப்படுவார்கள் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆபிரகாம் லிங்கன் தலைமையில், அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்து மணி நேர வேலை என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தினர். அதே காலகட்டத்தில், அமெரிக்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, 8 மணி நேர வேலை என்ற முழக்கத்தை முன்வைத்தது. 1886 மே 1 அன்று, நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. நாடு முழுமையும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். 1886 மே 3 ஆம் நாள், ஒரு நிறுவனத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அதைக் கண்டித்து, மே 4 அன்று, சிகாகோ நகரின் வைக்கோல் சந்தை (Hey Market) சதுக்கத்தில் திரண்டு, எட்டு மணி நேர வேலை என உரிமைக்குரல் எழுப்பினர்.
அவர்கள் மீது, காவலர்களின் குண்டாந்தடிகள் பாய்ந்தன; துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்தக் கலவரத்தில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், ஏழு பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு பேர் தூக்கில் இடப்பட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்களின் உரிமைக்குரல் ஐரோப்பிய நாடுகளில் எதிரொலித்தது; உலகம் முழுமையும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
1889 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாட்டில், மே 1 ஆம் நாளை, உலகத் தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றவுடன், மே 1 ஆம் நாளை, தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். கோவை சிதம்பரம் பூங்காவில், மே நாள் விழாவை சிறப்பாக நடத்தினார்.
நான் அமெரிக்கா சென்று இருந்தபோது, வைக்கோல் சந்தை சதுக்கத்திற்குச் சென்று, தூக்கில் இடப்பட்ட தொழிலாளத் தோழர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி இருக்கின்றேன். 1990 ஆம் ஆண்டு, மே நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் அவையில் முன்வைத்துப் பேசினேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று, பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, மே நாளை, அனைத்து இந்திய அளவில் அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அந்த நாளைக் கொண்டாடுகின்ற தொழிலாளர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.