கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெ., உதவியாளர் பூங்குன்றனிடம் 2-வது நாளாக விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸார் இரண்டாவது நாளாக இன்று (ஏப்.30) விசாரணை நடத்தி வருகினறனர்.

கொலை, கொள்ளைச் சம்பவம்: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடந்தது. கொள்ளை முயற்சியில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. விசாரணைக்கு ஏதுவாக கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இத்தனிப்படை போலீஸார் இதுவரை விசாரிக்காத நபர்களை எல்லாம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கடந்த சில நாட்களாக விசாரித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணன், மர வியாபாரியும், அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில நிர்வாகியுமான சஜீவன், அவரது சகோதரர் சிபி உள்ளிட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.

தீவிர விசாரணை: இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக முதல்முறையாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் நேற்று (ஏப்.29) முதல்நாள் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியவர் பூங்குன்றன். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை சந்திக்க வருபவர்களை இவர் தான் அனுமதித்து வந்தார். கோடநாடு எஸ்டேட் பற்றி நன்கு அறிந்தவர்களில் ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த பூங்குன்றனும் ஒருவர். எனவே, அவரிடம் கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.

கோடநாடு எஸ்டேட் கட்டமைப்பு, அங்குள்ள பொருட்கள், ஆவணங்கள் ஆகியவை குறித்தும், அங்கு பணியாற்றிய நபர்கள், அவர்களை வேலைக்கு நியமிப்பவர்கள் யார், சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து போலீஸார் அவரிடம் 6 மணி நேரம் விசாரித்தனர். இந்நிலையில் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக இன்றும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.