சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு திரும்புவதைப் பரிசீலிக்க சீன அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி, சீனாவில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 23,000. கோவிட் நோய்த் தொற்றின்போது சீனாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 2019-ம் ஆண்டிலிருந்து இம்மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கும் சூழல் உண்டானது. சீனாவிற்கு மீண்டும் சென்று கல்வியைத் தொடர முடியாத நிலையில் இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 25-ம் தேதி அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரான வாங் யீயை சந்தித்து இப்பிரச்னை குறித்துப் பேசிய போது, தகுதி உள்ள மாணவர்கள் மீண்டும் சீனாவிற்கு வந்து தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு விருப்பம் தெரிவித்தது.
தற்போது சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், மே 8, 2022-க்குள் தேவையான தகவல்களை வழங்குமாறு இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் தகவல்களைப் பூர்த்தி செய்தவுடன் சீனாவில் இருந்து தரப்பட்ட தகவல்களோடு ஒப்பிட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் படிப்பை முடிக்க சீனாவுக்குச் செல்ல முடியுமா என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.