சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படம் தந்த ஏமாற்றம்
கொரடலா சிவா இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான தெலுங்குப் படம் 'ஆச்சார்யா'. படம் எதிர்பார்த்தபடி இல்லாத காரணத்தால், நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி படம் என்றாலே தெலுங்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இப்படத்திற்கான முதல் நாள் வசூலே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அதே அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் முதல் நாள் வசூலாக 18 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. விமர்சனங்கள் நெகட்டிவ்வாக வந்துள்ளதால் எதிர்பார்த்தபடி ரசிகர்கள் வர மாட்டார்கள் என்ற அதிர்ச்சியில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம். இன்றும் நாளையும் விடுமுறை, அடுத்து ரம்ஜான் விடுமுறை என இருப்பதால் ஓரளவிற்கு வசூலித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. இருப்பினும் நஷ்டத்திலிருந்து தப்புவார்களா என்பது சந்தேகம்தான் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.