அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் (ஜாதி அடையாள) கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன் – உச்சிமாகாளி தம்பதியர். இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், செல்வசூர்யா, இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி செல்வ சூர்யாவுக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் அடைச்சாணி மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியுள்ளனர். இதில் கல்லால் செல்வ சூர்யாவை தாக்கியதாக தெரிகிறது. அதில், அவருக்கு காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே சமரசம் ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து மாணவரிடையே மோதல் நடந்தது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் துறையினர், சைபுதீன், பவுசில் சமீர், சுடலை மணி ஆகிய மூன்று மாணவர்கள் மீது 294(டி), 324, 506(2) என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மோதல் நடந்த அன்று வீட்டிற்குச் சென்ற மாணவன் செல்வ சூர்யா, தலையில் அதிக வலி இருப்பதாக கூற உடனடியாக மாணவனின் பெற்றோர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் செல்வ சூர்யா உயிரிழந்தார். இந்நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று பிரிவுகளில் 294 ( டி) என்ற பிரிவை மாணவர் கொலை செய்யப்பட்டதால் 302 கொலை வழக்காக பதிவு செய்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM