'60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்' – மின் தட்டுப்பாடு; ப.சிதம்பரம் சூசக ட்வீட்

சென்னை: நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமாகிய ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைச் சரி செய்ய ரயில்கள் மூலம் நிலக்கரியை வேகமாகக் கொண்டுவர இந்திய ரயில்வே முடிவு செய்தது. இதன்படி நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்குவதற்கான, நாடு முழுவதும் 657 பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

மேலும், 509 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 148 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலக்கரி கொண்டு செல்ல 533 சரக்கு ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1.62 லட்சம் நிலக்கரி மின்சார துறை கொண்டு செல்லப்படுவதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின்தடை தொடர்பாக பல மாநிலங்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மின் தட்டுப்பாட்டுக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே பாஜக நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக விமர்சனங்கள் உண்டு. அதனால், பாஜகவின் பாணியிலேயே ப.சிதம்பரம் மின் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை சூசகமாக விமர்சித்துள்ளார். மின் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்று ஆரம்பித்து தற்போதுள்ள மின்சாரம், ரயில்வே, நிலக்கரி துறைகளின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியையும் சிந்திக்கும் திறனற்றவர் என்று விமர்சித்துள்ளார். நிலக்கரி எடுத்துச் செல்லும் பொருட்டு பயணிகள் ரயில் சேவையை நிறுத்தியதைச் சுட்டிக் காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” ஏராளமான நிலக்கரி, பெரிய ரயில் நெட்வொர்க், பயன்படுத்தப்படாத அனல் மின் உற்பத்தி ஆலைகளின் திறன், ஆனாலும், கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மோடி அரசை குறை சொல்ல முடியாது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்! இது மின்சாரம், ரயில்வே,நிலக்கரி துறைகளின் திறமையின்மை இல்லை. குற்றச்சாட்டு கூறுவது எல்லாம் இந்த துறைகளுக்கு கடந்த காலத்தில் பொறுப்பு வகித்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீதுதான்! பயணிகள் ரயில்களை ரத்து செய்து நிலக்கரி ரயில்களை இயக்குவதுதான் அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு,மோடி ஹை, மம்கின் ஹை (சிந்தனைத் திறன் அற்றவர்) ” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.