"ஒடுக்குதலைப் புரிந்துகொள்ளவும், எதிர்கொள்ளவும் எனக்கு இலக்கியமே உதவியது!"- மனம் திறந்த பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்றும், இன்றும் தலித் எழுத்தாளர்களுக்கான வானம் கலைத் திருவிழா, வேர்ச்சொல் தலித் இலக்கிய சூடுகை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் பா.இரஞ்சித் நேற்று மனம் விட்டுப் பேசியதிலிருந்து…

“இந்த எழுத்துக் கூடுகைக்கு வந்திருக்கிற நீங்க எல்லோருமே என்னை செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கிற ஆசான்கள்னுதான் சொல்லணும். நீங்கள்தான் எங்கள் வேர்ச்சொல். எங்கள் கொண்டாட்டம், அழுகை, துக்கம். மிகப்பெரிய ஒரு ஆவணத்தை உருவாக்கி நீங்க எங்களுக்குக் கொடுத்திருக்கீங்க. இந்த டாக்குமென்ட் இல்லேன்னா, நாங்க இல்ல. பொதுவா என் எழுத்து இல்ல. என் உலகம் இல்ல. என் சினிமா இல்ல. நான் ஒரு ஆளாக, மனுஷனாக இருக்கறேன்னா உங்களுக்குத்தான் பெரிய நன்றி சொல்வேன்.

மேடையில் பா.இரஞ்சித்

பொதுவா கிராமங்கள்ல இருக்கற சாதிய வேறுபாடுகளை புரிஞ்சு கொள்கிற வயசில நான் படிக்க ஆரம்பிச்சேன். ‘ஊர் ஏன் எனக்கானதா இல்லே?’னு ஒரு கேள்வி என் சின்ன வயசில இருந்து எனக்கு கேட்டுக்கிட்டே இருக்கும். நான் வாழ்ந்த நிலம்தான் சாதிய இறுக்கத்தை, இந்த ஒதுக்குதலை வாழ்க்கையோட அனுபவமா புரிஞ்சுக்க வெச்சது. இந்த ஒதுக்கல் எல்லா வயதிலும் இருந்தது. இதை எப்படிப் புரிந்து கொள்வது, இதை எப்படி எதிர்கொள்வது, அது அடுத்தகட்டத்துக்கு எப்படி நகருது என்கிற சூழல்கள்லதான் ஓவியக் கல்லூரி காலகட்டங்கள்ல இலக்கியங்களை வாசிக்க ஆரம்பிச்சேன். இந்த இலக்கியங்களை நான் வாசிக்கலைனா என்னவாக ஆகியிருப்பேன்னு எனக்குத் தெரியல. அந்த இலக்கியங்களை வாசிச்சதன் மூலமாகத்தான் திரைப்படம் எடுக்கணும் ஆர்வம் வந்தது. அந்தளவுக்கு இலக்கியம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா தலித் எழுத்துக்கள்தான் என்னை திடமா செதுக்கியதுனு சொல்வேன். ஆப்பிரிக்க இலக்கியத்துடனும் என்னால இணைத்துக்கொள்ள முடிந்தது. உலகளவுல கறுப்பர்களின் ஒடுக்குதலும், இந்தியளவுல தலித்துக்களை ஒதுக்குதலும் என்னை நானே கனெக்ட் பண்ணிக்க வச்சது.

கூட்டத்தில் பா.இரஞ்சித்.

எனக்கு எப்பவுமே கொண்டாட்டங்கள் மீது ஒரு பெரிய ஆர்வம் இருந்திருக்கு. எங்க ஊர் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள்கள் நடக்கும். அந்தக் கொண்டாட்டத்தில நான் கலந்துக்க முடியலைங்கறது எனக்குள்ள பெரிய ஏக்கத்தையும் வலியையுமே ஏற்படுத்துச்சு. திருவிழாவுல, சாப்பிடுற இடத்துலனு எல்லாமே ஒரு ஸ்ட்ரக்சுரலா நடந்தது. நான் ஒதுங்கி நின்னதை உணர முடிஞ்சது. இந்திய கொண்டாடங்கள்ல நான் எந்த இடத்துல நிக்குறேன் என்பது என் சின்ன வயசிலேயே தெரிஞ்சது. என் கொண்டாட்டம் குறுகிய வட்டத்துக்குள்ள இருந்ததை என்னுடைய வாழ்க்கை அனுபவத்தினூடே பாத்தேன். ஆனா, நான் வாசிக்கும் போதுதான் அந்தக் கொண்டாட்டத்தைவிட இந்தக் கொண்டாட்டம் எந்த வகையிலும் குறைந்ததில்லைனு புரிஞ்சுக்க முடிஞ்சது.

கே.ஏ.குணசேகரின் ‘வடு’, பாமா அவர்களுடைய ‘தெருக்கள்’, அழகிய பெரியவன் அண்ணனுடைய நாவல்கள், இமயம் அண்ணனுடைய எழுத்துக்கள்னு வாசிக்கறப்ப இந்த சோறுதானே நாம சாப்பிட்டது, இந்தக் கஞ்சிதானே நாம குடிச்சது, இந்தத் தெருதானே… என என்னால கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. எந்தவிதத்திலும் குறைவில்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன். ஆனா, சமூக அளவில் ரொம்பவும் சிஸ்டமெடிக்கா படைக்கப்பட்ட ஒரு ஒடுக்குதல்குள்ள நாம வாழ்ந்திருக்கோம்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. நம்மள ஒடுக்க ‘இல்லாமை’ காரணங்கள் நிறைய வச்சிருக்காங்க. பொது சமூகம் சொல்கிற அந்த இல்லாமை எதுவுமே என்னுடையது கிடையாது. அதைவிட அற்புதமான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்.

மேடையில் பா.இரஞ்சித்

என்னை நான் சுதந்திரமா கருத வைக்கறதுக்கு இலக்கியங்கள் வாசிப்புத்தான் காரணம். வரலாற்று ரீதியா பார்க்கறப்ப நமக்கான கொண்டாட்டங்கள் ஏன் தடுக்கப்பட்டிருக்கு… நமக்கான தடைகளை எப்படி உடைக்கலாம்… கலை இல்லாமல் தலித்தியம் இல்லை. கதைகள் கேட்டு உறங்கின ஆளாக நான் இருந்திருக்கேன். கதைகளுக்குள் சாதிச்சார்ந்த ஒடுக்குதல்கள் இருந்திட்டே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு உட்பட்டுத்தான் அம்பேத்கரின் பிறந்த மாதத்தை முன்னிட்டு ஏன் இந்த நிகழ்வை நிகழ்த்திப் பார்க்கக்கூடாது என்றுதான் இப்படி நடத்திட்டு இருக்கோம்” என மனம் திறந்திருக்கிறார் இரஞ்சித்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.