டெல்லி: மாநிலங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை வேகப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் 753 பயணிகள் ரயில்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதால் பெரும்பாலான அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து அதன் எதிரொலியாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மின்னுற்பத்தி வெகுவாக குறைந்து விட்டதால் மின்வெட்டு தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. வெயில் வாட்டி வதைக்கும் கோடி காலத்தில் பலமணி நேரம் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மாநிலங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை தீவிரப்படுத்தும் விதமாக மே மாதம் 24-ம் தேதி வரை நாடு முழுவதும் 753 பயணிகள் மற்றும் அதிவேக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதில் 500 ரயில்கள் தொலைதூர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆகும். பயணிகள் ரயில்களை ரத்து செய்து விட்டு தினமும், குறைந்தது 400 ரயில்கள் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு பயணிகள் ரயில்களை ரத்து செய்து விட்டு கூடுதல் ரயில்களை இயக்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று ஒருநாளில் மட்டும் சோதனை அளவாக நாடு முழுவதும் 2,07,111 மெகாவாட் அளவுக்கு மின்னிகர்வு நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.