ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தாக்குப்பிடிக்குமா மும்பை அணி..? – இன்று மோதல்

மும்பை,
நடப்பு தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி (ஜோஸ் பட்லர்- 3 சதம் உள்பட 499 ரன்), ஊதா நிற தொப்பி (யுஸ்வேந்திர சாஹல்- 18 விக்கெட்) இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களே தக்க வைத்துள்ளனர்.
சூப்பர் பார்மில் உள்ள ராஜஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும்வரிசையாக வெற்றிக்கனியைபறித்துள்ளது. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், கேப்டன் சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சிலும் அசத்துவதால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கும் நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒரே அணி மும்பை தான். 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது. 
கேப்டன் ரோகித் சர்மா (8 ஆட்டத்தில் 153 ரன்), இஷான் கிஷன் (199 ரன்) ஆகியோர் சரியான தொடக்கம் அமைத்து தராததும், பந்து வீச்சின் பலவீனமும் மும்பையை வீழ்ச்சி பாதைக்கு தள்ளிவிட்டுள்ளது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். 
முடிந்த வரை கவுரவமான நிலையை அடைய கடுமையாக போராடுவார்கள். ஏற்கனவே தொடக்க லீக்கில் ராஜஸ்தானிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை அணி இந்த ஆட்டத்தில் இருந்தாவது எழுச்சி பெறுமா என்பதை பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.