இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றாததால், இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைக்க கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததன் மூலம் குடிமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க முடிந்தது” என்று பிரதமர் மோடி அன்மையில் பேசியது விவாத பொருளானது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி குறிப்பிட்ட 7 மாநிலங்களில் டெல்லி இடம்பெறவில்லை. ஆனாலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு முன்பு பா.ஜ.க-வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா “மற்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எரிபொருளின் மீது வாட் வரியை குறைக்கும் போது, டெல்லி அரசு ஏன் அவ்வாறு செய்யவில்லை? டெல்லி மக்களுக்கு நிவாரணம் வழங்க கெஜ்ரிவால் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் நடந்த ஆர்பாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவலின் வீடு தாக்கப்பட்டதால், இந்த முறை பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.