சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை 4 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தார்ச் சட்டியையும் பிரசையும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் கைகளில் கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, ரெயில் நிலைய பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கச் சென்றனர். அவர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகிலுள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் கி.வீரமணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டனர்.