சேலம்: “நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத்தான மின் தடை ஏற்பட்டுக்கொண்டிரு்ககிறது. எனவே தமிழக அரசு தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.30) திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம்.
வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாரும் தூங்க முடியாது. அதிலும் நகர் பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. புழுக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவிடுவர்.
நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாகத்தான் இன்றைய தினம் மின்தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து, தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.