சென்னை மாநகரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். சென்னை பெருங்குடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகின்றது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் ஒரு இடத்தில் உருவான தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென்று மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. விபத்தை அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தற்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், 15 ஏக்கர் அளவுக்கு தீ பரவியது. 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பெருங்குடி பகுதியே புகை மண்டலமாக மாறியது. இந்த புகை காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு ஆளாகினர். தீ விபத்தில் அதிகளவில் வெண் புகை வெளியேறி அந்த பகுதி முழுவதும் பரவியதால், அரசு சார்பில் அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நான்காவது நாளாகத் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
தற்போது தீ ஒரு இடத்திலிருந்து மாற்றொரு இடத்துக்குப் பரவாத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஏற்கனவே தீ பற்றிய குப்பை குவியல்களிலிருந்து அவ்வப்போது தீ எரிவதும், புகை வெளியேறுவதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. அதனால், அந்த குப்பை குவியல்களை மண் வைத்து மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.