மக்களின் தேவையை உள்ளடக்கிய சட்டங்களை இயற்ற வேண்டும்! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த 39வது உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘மக்களின் தேவையை உள்ளடக்கிய சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 39வது தலைமை நீதிபதிகளின் மாநாடு இன்று நடைபெற்றது. 25 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதல் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் வரையிலான கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன. தொடர்ந்து மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். மேற்கண்ட இரு மாநாடுகளும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து நடைபெற்றன. இம்மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார். மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘நீதியை வழங்குவதற்காக, அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு இந்த மாநாடு உதவும்’ என்றார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ‘டிஜிட்டல் இந்தியா திட்டமானது நீதித்துறையின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. இ-கோர்ட் திட்டம், டிஜிட்டல் இந்தியா மூலம் செயல்படுத்தப்படுகிறது. நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இதனால் சாமானிய மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். கடந்த 2015ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பயன்பாடற்ற மற்றும் நடைமுறையில் இல்லாத 1,800 சட்டங்களை கண்டறிந்தோம். இவற்றில் 1,450 சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்தது. 75 சட்டங்களை மாநிலங்கள் ரத்து செய்துள்ளன’ என்றார். முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில்,பொது நல வழக்குகளின் பின்னால் உள்ள நல்ல நோக்கங்கள் சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இதுபோன்ற வழக்குகள் தனிப்பட்ட நலன் சார்ந்த வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இவை பொது அதிகாரிகளைப் பயமுறுத்தும் வகையில் உள்ளது. அரசியல் மற்றும் கார்ப்பரேட் போட்டியாளர்களிடையே சுய தேவையை தீர்மானிக்கும் கருவியாக மாறியுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் சம்பந்தப்பட்ட மக்களின் தேவைகள்  மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய முழுமையான விவாதங்கள் நடத்தியப் பின்னர் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நிர்வாகிகள்  சரியாக செயல்படாததாலும், சட்டமன்றங்களின் செயலற்ற தன்மையாலும் அடிக்கடி வழக்குகள் தொடரப்படுகின்றன. ‘லட்சுமண ரேகை’யை அனைவரும் கவனத்தில்  கொள்ள வேண்டும். நகராட்சிகள், கிராம  பஞ்சாயத்துகள் சரியாக தங்களது கடமைகளை செய்தால், போலீசார் முறையாக விசாரணை நடத்தினால், சட்ட  விரோத காவலில் சித்திரவதைக்கு முடிவு கட்டினால், பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.