திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.930 கோடியில் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளையும், தற்போது நடைபெற்று வரும் பணிகளையும் பட்டியலிட்டார். அவர் பேசியதாவது:-
• ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இந்த ஓராண்டில் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் மூலம் 121 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. 
• குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் 709 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
• சுகாதாரப் பணிகளுக்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் 822 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
• அடிப்படை வசதிக்கான பணிகளுக்காக ரூ.37 கோடி மதிப்பீட்டில் 1,128 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
• கிராமப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கிற ஏழை மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.107 கோடி மதிப்பீட்டில் 3,907 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
• இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக 8 உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 321 வீடுகள் கட்டும் பணி ரூ.17.16 கோடி மதிப்பீட்டில் முடிவடையக்கூடிய தருவாயில் இருக்கிறது, அதற்காக தேதியை நம்முடைய அமைச்சர்களும், ஆட்சித் தலைவர் அவர்களும் இன்றைக்கு நினைவுபடுத்தி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 
• தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 69 கி.மீ நீளத்திற்கு 43 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.21.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அடிப்படையில் 10,463 பணிகள் ரூ.411 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  வரும் நிதியாண்டிற்கு ரூ.108 கோடி உத்தேச ஒதுக்கீடு வரப்பெற்றிருக்கிறது.
• தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் 6,165 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணி ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
• தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின்கீழ் 102 சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகள் ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டிருக்கிறது.
• சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
• நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
• நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 18 பணிகள் ரூ.4.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
• தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் 2 பணிகள் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மலைகிராமங்களில் 243 பணிகள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
• அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 102 கிராம ஊராட்சியில் உள்ள நூலகங்கள் பழுது நீக்கம் செய்வதற்கு ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
• அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 70 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.44 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
• திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் முதற்கட்டமாக 6 சமத்துவபுரங்களில் 695 மறுசீரமைப்புப் பணிகள் ரூ.6 கோடியில் நடைபெற்று வருகிறது. 
• நபார்டு திட்டத்தின்கீழ் 10 பாலங்கள் கட்டும் பணிகள் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.1,080 கோடி மதிப்பீட்டில் 27,265 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை, நான் சொன்னவை அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் இந்த ஓராண்டுப் பணிகள் மட்டும்தான். இப்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான சில திட்டங்களை இந்த விழாவின் மூலமாக நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
• 930 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்றைத் தீட்டி இருக்கிறோம். 
• ஒட்டன்சத்திரம் நகராட்சி நெய்க்காரப்பட்டி மற்றும் கீரனூர் பேரூராட்சி ஆகியவற்றிற்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 217 குடியிருப்புகளுக்கும், பழனி ஒன்றியத்தில் உள்ள 116 குடியிருப்புகளுக்கும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 173 குடியிருப்புகளுக்கும், ஆழியாறு நதியை ஆதாரமாகக் கொண்டு இத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனுடைய மொத்த மதிப்பு 930 கோடி ரூபாய்.
• இதேபோல் மேலும் ஒரு குடிநீர்த் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு, திண்டுக்கல் மாநகராட்சி, ஆறு பேரூராட்சிகள் மற்றும் கரூர் மாவட்டத்தில் இருக்கிற 815 குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கக் கூடிய திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக, தற்போது 21 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே அளிக்க முடிகிறது. இத்திட்டத்தின் கீழ்,  கூடுதலாக 23 எம்.எல்.டி குடிநீரைத் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அளிக்கும் வகையில் 95.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் மேம்படுத்தப்படும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.