Behind Stalin’s Lanka aid move: state rights assertion, DMK’s diaspora image makeover: இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றிய தமிழக சட்டசபையின் நடவடிக்கை, பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்பு இதே போன்ற கோரிக்கைகளுக்கு பதிலளிக்காததை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைமையிலான அரசு இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான இலங்கைக்கு தமிழக அரசு அனுப்ப முன்வந்துள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை விரைவாக வழங்குவதற்கு தேவையான செயல்பாடுகளை செய்ய, வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகையான உயிர் காக்கும் மருந்துகள், ரூ.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை இலங்கைக்கு முதற்கட்டமாக அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, தனது புதுடெல்லி பயணத்தின் போது, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப தமிழக அரசை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது இலங்கையிலிருந்து அந்நாட்டு தமிழர்கள், பலர் கடல் வழியாக தமிழகம் வருவதை முதல்வர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார். இந்த கோரிக்கையை தொடர்ந்து, இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
அண்டை நாடான இலங்கையில் கடும் நெருக்கடி நிலவி வரும் நிலையில், தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு அலட்சியமாக இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் கடைசிப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் புத்தகமான “Sri Lanka: Hiding the Elephant” நூலின் ஆசிரியரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியருமான ராமு மணிவண்ணன், “இந்திய அரசாங்கம் இந்த முடிவை தாமதப்படுத்த எந்த காரணமும் இருக்க முடியாது” என்றார். மேலும், “இலங்கைக்கு உதவுவதற்கான தமிழ்நாட்டின் திட்டத்தைப் பொருத்தவரை, இந்தியாவும் மாநில அரசாங்கங்களும் இதற்கு முன்னர் இதைப் போன்று செய்ததற்கான முன்னுதாரணம் இல்லை. பங்களாதேஷ் அகதிகள் நெருக்கடி உச்சத்தில் இருந்த போது, அந்த மக்களுக்கு உதவுமாறு மத்திய அரசை மேற்கு வங்கம் கேட்டுக் கொண்ட நிகழ்வுகள் உள்ளன. இலங்கை மக்களுக்கான உதவி மிகவும் முக்கியமானது. தமிழக அரசின் உதவிகளான அரிசி, மருந்துகள் மற்றும் பால் பவுடர் விநியோகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இலங்கைக்கு எந்த காரணமும் இல்லாதபோது, இது ஒரு மனிதாபிமான நெருக்கடி என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்து, இந்தப் பொருட்கள் உடனடியாக மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், ”என்றும் ராமு மணிவண்ணன் கூறினார்.
இதற்கு முன்னரும் இதேபோன்ற உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது. 1987ஆம் ஆண்டு தமிழர்கள் செறிந்து வாழும் வட இலங்கையில் போர் போன்ற சூழ்நிலையில் அப்போதைய ஜே ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கம், பொருளாதாரத் தடையை விதித்ததை அடுத்து, இலங்கை அரசின் அனுமதியின்றி, அப்போதைய ராஜீவ் காந்தி அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை அங்கு அனுப்புவதற்கு முன்னோடியில்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டது. “பறிப்பு ட்ராப் (ஆப்ரேசன் பூமாலை)” என்று பிரபலமாக அறியப்படும் இந்த நடவடிக்கையில், இந்தியா அப்போது பல விமானங்களை, போர் விமானங்கள் துணையுடன் அழைத்துச் சென்று, உணவுப் பொட்டலங்கள் மற்றும் உணவுப் பொருட்களை யாழ்ப்பாண பகுதியில் ஏர் டிராப் செய்ய அனுப்பியது. இதேபோன்ற பணி 2008 இல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது, இந்தியா, இலங்கையின் வடக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியது.
ஒரு உயர்மட்ட மாநில அதிகாரவர்க்கம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் “மாநில உரிமைகள் பற்றிய வளர்ந்து வரும் விழிப்புணர்வின் விரிவாக்கமாக” பார்க்கப்படலாம் என்றார். இந்த விவகாரத்தை பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தும், அவருக்கும் கடிதம் எழுதிய பிறகும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மத்திய அரசின் நிலைப்பாடுதான், மாநில அரசு இந்த அதிகாரப்பூர்வ தீர்மானத்தை சட்டசபையின் மூலம் முன்வைக்க தூண்டியது என்று அந்த அதிகாரி கூறினார். “தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு எடுக்கும் முடிவுகளில் மத்திய அரசு முற்றிலும் அலட்சியமாக இருக்கிறது என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. ஒருவேளை இறுதியாக ஒரு பதில் வந்தால், அவை பின்வருமாறு இருக்கும்: நிபந்தனையற்ற ‘ஆம்’ அல்லது ‘இல்லை’. இல்லையெனில், நிவாரணப் பொருட்களை மத்திய அரசு வழியாக அனுப்பவும், எதை அனுப்புவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யவும் மாநில அரசை வலியுறுத்துவார்கள்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
’தமிழர்கள் மட்டுமின்றி இலங்கையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம்’
அனைத்து இலங்கை மக்களுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஸ்டாலின் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டப்பேரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு முதலில் இந்த திட்டத்தை முன்வைத்தபோது, இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உதவும் முயற்சியாகக் காணப்பட்டது, இது சிங்களவர்கள் உட்பட பல இலங்கை மக்களிடையே விவாதத்தைத் தூண்டியது மற்றும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதேநேரம் “இலங்கையில் தமிழர்கள் துன்பப்பட்டபோது அங்கு யாரும் கவலைப்படவில்லை” என்று பல தமிழர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களில் பலர் இலங்கை தற்போது முன்னோடியில்லாத நெருக்கடியில் இருப்பதாகவும், “அந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உதவி வழங்கப்பட வேண்டும்” என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் போல காத்திருக்கக் கூடாது; ஜூனில் உதயநிதி அமைச்சர்: தி.மு.க அதிரடி மூவ்
எவ்வாறாயினும், உதவி சிங்களவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை இலங்கை அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மணிவண்ணன் கூறினார். மேலும், “தமிழர்களுக்கு நன்மைகளை வழங்காத சிங்கள ஆட்சியின் முன்னுதாரணம் இருப்பதால் நான் இதைச் சொல்கிறேன். சுனாமி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு அல்லது போருக்குப் பிந்தைய காலகட்டம் தொடர்பான நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்தின் பக்கச்சார்பான அணுகுமுறை பற்றி நன்கு நிறுவப்பட்ட பதிவு உள்ளது, ”என்றும், “அரசாங்கம் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பது மக்களின் நடத்தையை விட முக்கியமானது” என்றும் அவர் கூறினார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பிரச்சனைகளை சரிசெய்ய ஸ்டாலினின் முயற்சி
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு எப்போதும் கலவையாகவே உள்ளது, அதிமுகவின் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் இந்த விவகாரத்தில் முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியை விட சிறப்பாகச் செயல்பட்டதாக கருதப்படுகிறார்கள். மேலும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, டெல்லியில் அதிகாரத்தை தியாகம் செய்யவில்லை அல்லது இறுதிக்கட்ட போரின் போது வட இலங்கையில் நடந்த படுகொலைகளைத் தடுக்க எதையும் செய்யவில்லை என்று இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள், அடிக்கடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
இந்தப் பின்னணியில் திமுகவின் மோசமான பிம்பத்தை மாற்றியமைக்க ஸ்டாலின் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சிக்கு வந்த உடனேயே, தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வீடுகள் புனரமைக்க ரூ.317 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளுக்கும் திமுக அரசு நிதி ஒதுக்கியது. இப்பிரச்சினையில் தனது கட்சியின் மோசமான “கடந்த கால நிலைப்பாடுகளை” தீர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள சட்டசபை தீர்மானம் உள்ளது.