எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலின் தலைப்பே படத்தின் தலைப்பாய் சூட்டப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சைக்கு நடுவே ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. கடந்த 2019 ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவனிக்க வைத்த ‘விக்ருதி’ படத்தின் ரீ-மேக்தான் இப்படம். விதார்த், லட்சுமி பிரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.பி சக்திவேல் இயக்கியுள்ளார்.
லைக், கமேண்ட், ஷேருக்காக சாப்பிடுவதில் ஆரம்பித்து எதுவாக இருந்தாலும் போட்டோ, வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடும் பழக்கத்திற்கு அடிக்ட் ஆனவர் ஆண்டனி (கருணாகரன்). ஒருநாள் ரயிலில் நிகழும் ஒரு சம்பவத்தை படம் எடுத்து பதிவிடுகிறார். எதையுமே தீர விசாரிக்காமல் , ஆர்வக்கோளாரால் அவர் செய்த செயல் காது- வாய் பேசமுடியாத நூலகர் எழிலனையும் (விதார்த்) அவரது குடும்பத்தினரையும் எப்படி பாதித்தது? விதார்த்துக்கு பணியிடத்தில், குடும்பத்தில், சமூகத்தில் ஏற்படும் நெருக்கடிகள் என்னென்ன? இந்த சூழலில் காதல் திருமணம் செய்துகொள்ளும் கருணாகரனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைதான் ’பயணிகள் கவனிக்கவும்’ கதை.
வில்லத்தனமாகவும் எள்ளல்தனமாகவும் என ஒரேமாதிரி நடித்துக் கொண்டிருந்த விதார்த், நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் சிறப்பான கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சக மாணவனுடன் சண்டை போடும் தனது மகனுக்காக கோச்சிடம் மன்னிப்பு கேட்பது, வறுமைச்சூழலை புரிந்துகொண்டு, பிய்ந்துபோன ஸ்போர்ட்ஸ் ஷூவை தைத்துக்கொள்ளலாம் என்று மகன் கூறினாலும் புது ஷூ வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்துவது, மனைவி, பிள்ளைகள் மீது பாசம் கொட்டுவது, ஹவுஸ் ஓனர் கவிதாலயா கிருஷ்ணனிடம் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளாத இணக்கம் என பேசாமலேயே பார்வையாளர்களை நெகிழ்வுடன் பேச வைத்துவிடுகிறார் விதார்த்.
விதார்த்தின் மனைவி தனலட்சுமியாக லட்சுமி பிரியா. பேச்சு வராமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பா அவமானப்படுத்தப்படும்போது இயல்பான ரெளத்திரத்துடன் கொதித்தெழும் மகனாவும், அப்பாவை புரிந்துகொள்ளும் மகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விதார்த்தின் மகனாக வரும் சிறுவன். மகளாக வரும் சிறுமியும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து சென்னை வரும் கருணாகரன், என்னடா என் மேல ஏதாவது கோபமா? என்னோட பதிவுகளுக்கு எதுவுமே லைக்ஸ், ஷேர் பண்ண மாட்ற? என்று நண்பனிடம் ஏர்போர்ட்டில் கேட்பதில் ஆரம்பித்து தனது அம்மா, தங்கைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதையே லைக்ஸிற்காக லைவ் கொடுப்பது என சோஷியல் மீடியா அடிக்ட்டராக பிரிதிபலித்திருக்கிறார். ‘சைபர் கிரைம்’ பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் அச்சம், மன உளைச்சல்கள் என காட்சிக்கு காட்சி ரியாக்ஷன்களால் கதைக்கு ‘ரியாலிட்டி’ கொடுத்திருக்கிறார். காதலிக்காக அவர் வாங்கி குவிக்கும் பூந்தொட்டிகள், அவரது வீட்டை பூந்தோட்டமாக மாற்றுவது பார்வையாளர்களின் கண்களுக்கும் ஜிலீர். அதுவும், போலீஸுக்கு பயப்படும் காட்சிகளில் கருணாகரன் சிற(ரி)ப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் மனைவியாக வரும் மஸும் சங்கர் ம் தனது அழகான பார்வையால், சிரிப்பால் வசீகரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் க்ளைமாக்ஸ் ஃபைட் என்றாலே ’பின்னிமில்’லை புக் செய்வதுபோல போல, ‘ப்ராங், சோஷியல் மீடியா’ தொடர்பான படங்கள் என்றாலே அந்த சரித்திரனையும் புக் பண்ணுங்கப்பா என்று சொல்லிவிடுகிறார்கள் போல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும். எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் இல்லாமல் கதை நகரும் போக்கில் அவ்வப்போது சில காமெடிகளை செய்து சிரிக்க வைத்துவிடுகிறார் கருணாகரனின் நண்பனாக நடித்திருக்கும் சரித்திரன். அரசு மருத்துவமனையில் படுத்திருக்கும் முதியவரின் சோகம் நிறைந்த காட்சியில்கூட சிரிக்க வைத்து விடுகிறார். அடுத்தடுத்து, படங்களில் நடித்து சாதிக்கவேண்டும் என்றால் அவர் ஜிம்முக்கு செல்லவேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் உள்ளார்.
பைக் ரேஸில் ஈடுபடட்ட இளைஞர்களை சமீபத்தில் மருத்துவமனையின் விபத்து பிரிவில் உதவியாளராக பணியாற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை, நினைவுபடுத்தியது நேர்மையான இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், தவறு செய்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள்.
விதார்த்துக்காக துணை நிற்கும் கதாப்பாத்திரத்தில் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹவுஸ் ஓனராக வரும் கவிதாலயா கிருஷ்ணன். அதைவிட கவனிக்கத்தக்கது, ஊடகத்தில் பணியாற்றும் அவரது மகளின் கதாப்பாத்திரம். ஒரு பொய்யான செய்தி ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது? அதை, எப்படி சமாளிப்பது என்ற விழிப்புணர்வையூட்டுகிறது அந்த ஊடகவியாளர் கதாப்பாத்திரம்.
’கண்ணால் காண்பது பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்பதை சோஷியல் மீடியாக்காரர்களுக்கு மட்டுமல்ல, அதைப்பார்த்து அவசரத்தில் செய்தி வெளியிடும் பத்திரிகை, டிவி மீடியாக்காரர்களும் கவனிக்கும்படி காட்சிப்படுத்திய இயக்குநர் எஸ்.பி சக்திவேலுக்கு பாராட்டுகள்.
கதையின் ப்ளஸ்:
’குற்றமே தண்டனை’ என நடித்த விதார்த்தை ‘மன்னிப்பே தண்டனை’ என நடிக்க வைத்து நம் இதயத்தில் வெற்றியடைய வைத்திருப்பது படத்தின் ப்ளஸ். பேச இயலாத கதாப்பாத்திரங்கள்தான் படத்தில் பேசவே செய்கின்றன. நம்மை பேசவும் வைக்கின்றன. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இயல்பான காட்சிகளால் கவனிக்க வைக்கிறது. பாசாங்கு இல்லாத பாசமான பலக்காட்சிகள் பாசிட்டிவ் எனர்ஜியையூட்டுகின்றன. ஒரு அழகான பயணம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதையில் சில குறைகளும் உள்ளன.
இது அதிரடி ஆக்சன் படம் அல்ல, உண்மையான வாழ்வியலை பிரதிபலிக்கும் படம். அதனால், படத்தில் வேகத்தை எதிர்பார்க்கமுடியாது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மீது இயக்குனநருக்கு என்ன கோபமோ? மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதில், பஞ்சாயத்து செய்து பணம் கொழிக்கும் சங்க நிர்வாகியும் இருக்கலாம், மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கால் இல்லாத சிறுமி விபத்தில் சிக்கிக்கொள்ள அதில் பஞ்சாயத்து பேசி பணம் பறிப்பதுபோலவும் அது ஏதோ திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் போலவும் காட்சிப்படுத்தியிருப்பது நிச்சயமாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரிடம் சங்கடத்தை ஏற்படுத்துவபோல் அமைந்துள்ளது. நல்லவர்போல் காண்பிக்கப்படும் கோச், மற்றொரு மாணவரை கண்டிக்காமல் விதார்த்தின் மகனை மட்டுமே கண்டிப்பது, தண்டிப்பது முரண். மற்றபடி, படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு குறைகள் ஏதுமில்லை.
பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் அருமை. ’பகைவனுக்கு அருள்வாய்’ பாரதியின் பாடல் சூழலுக்கேற்ப பின்னணியில் ஒலித்து நம் மனதில் நின்றுவிடுகிறது.
பொய் செய்திகள் லைக்ஸ், ஷேர்களை அள்ளலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவின்போது லைக்ஸ், ஷேர் செய்த ஒருவரும் துணைக்கு வரப்போவதில்லை என்பதை காண்பித்ததோடு, எந்த ஒரு செய்தியையும் தீர விசாரிக்காமல் பகிரக்கூடாது என்பதைக்கூறி சமூக ஊடகத்தினர், பத்திரிகை, டிவி, வெப்சைட், பொதுமக்கள் அனவரையும் கவனிக்க வைத்திருக்கிறது இந்த ’பயணிகள் கவனிக்கவும்’. அதனால், ரசிககள் தாரளமாக கவனித்துப் பார்க்கலாம்.
– வினி சர்பனா