தி.மலை விசாரணைக் கைதி உயிரிழப்பு | டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருவண்ணாமலை: விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணி அருகே உள்ள தட்டரணை கிராமத்தில் வசித்தவர் தங்கமணி. இவரை, சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக, திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் கடந்த 26-ம் தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரது உடல்நிலை மறுநாள் (27-ம் தேதி) பாதிக்கப்பட்டதாக கூறி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர், சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்துவிட்டதாக காவல்துறை மற்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவரை விடுவிக்க ரூ.2 லட்சம் தர மறுத்ததால், தங்கமணியை காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாக, திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷிடம் மலர் (தங்கமணி மனைவி) கடந்த 28-ம் தேதி புகார் அளித்துள்ளார். மேலும், கணவரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குவரை தங்கமணியின் உடலை பெறமாட்டோம் என அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, மாஜிஸ்திரேட் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தங்கமணியின் உடலை 3-வது நாளாக இன்று (30-ம் தேதி) பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். அவரது உடல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சட கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தங்கமணியின் மரணத்துக்கு காரணமானவர்களாக கூறப்படும், திருவண்ணாமலை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், காவல் ஆய்வாளர் நிர்மலா, முதல்நிலை காவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று(30-ம் தேதி) உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், வலிப்பு நோய் ஏற்பட்டு தங்கமணி உயிரிழந்துவிட்டதாக, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறி வந்த நிலையில், டிஎஸ்பி உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.