புது டில்லி: வெளிநாடு வாழ் சீக்கியர்கள் குழு, டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தது.
அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் சீக்கிய சமூகத்தின் பங்களிப்புக்கு இந்த நாடே நன்றி சொல்ல கடமைபட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் பாரத மாதாவின் அடையாளங்கள். இந்தியாவின் குரலை எதிரொலிப்பவர்கள். இந்தியர்கள் கையில் எதுவுமின்றி உலகின் பல பாகங்களுக்குச் சென்று தங்கள் கடின உழைப்பால் முன்னேறி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள். இது தான் புதிய இந்தியாவின் உணர்வு. இந்தியா, உலகம் முழுதும் புதிய எல்லைகளை தொட்டு தனி முத்திரையை பதித்து வருகிறது.
இதற்கு கொரோனா தொற்று நோயை உதாரணமாக கூறலாம். கொரோனாவை மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவால் எப்படி சமாளிக்க முடியும் என்றார்கள். சமாளித்தது மட்டுமின்றி தடுப்பூசி கண்டுபிடித்து உலக மக்களையும் காப்பாற்றி வருகிறது. நான் அவ்வப்போது குருத்துவாராக்களுக்குச் சென்று சேவை செய்வதற்கும், சீக்கிய குடும்பங்களுடன் தங்குவதற்கும் சிறிது நேரம் ஒதுக்குகிறேன். சீக்கிய குருமார்களின் காலடி அடிக்கடி என் வீட்டில் படுவதை பெறும் பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement