பகல்பூர்: பீகாரில் 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் பீகாரின் கஹார்யா மற்றும் பகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் 4 வழிப்பாதை பாலமாகும். பகல்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தரவாகினி கங்கா ஆற்றங்கரையை இணைக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தபோது பலமாக இடி இடித்தது. அப்போது திடீரென சுமார் 100 அடி நீளத்திற்கு இந்த நவீன பாலம் இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மிகவும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதால் தான் இடி இடித்ததற்கே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 125 மீட்டர் நீளத்திற்கு இடையில் எந்த தூண்களும் எழுப்பப்படவில்லை. கேபிள் கனெக்டர் என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட இந்த பாலம் இடியால் இடிந்து விழுந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2020ம் ஆண்டு பீகாரில் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சத்ரகாட் பாலம் திறப்பு விழா கண்டு ஒரே மாதத்தில் தண்ணீர் அடித்துக்கொண்டு போன சம்பவம் நினைவுகூரத்தக்கது.