மோசடி தொகையில் பரிசு வாங்கிய ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸின் ரூ.7.27 கோடி சொத்துகள் பறிமுதல்!

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பரிசாக வழங்கிய ரூ. 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை.

இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இதுதான் தற்போது ஜாக்குலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

சுகேஷ் சந்திரசேகர் மோசடியாக சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுமார் 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான வைப்புத்தொகையையும், 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது.

சுகேஷ் சந்திரசேகர் தனது கூட்டாளியான பிங்கி இரானி என்பவரை பயன்படுத்தி இந்தப் பணத்தை கொடுத்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

Private jet travels, 'Gucci, LV, Chanel, diamonds' from conman Sukesh:  Jacqueline bares it all! - India News

இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் சுகேஷ் சந்திரசேகர். ஆனால் அவர் சிறையில் இருந்தபோதே, சிறை அதிகாரிகளின் உதவியுடன் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது.

சிறையில் இருக்கும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கிற்கு பிணை வாங்கி தருவதாக அவரது மனைவி அதிதி சிங்கை தொலைபேசியில் ஏமாற்றி 200 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியாபால், கூட்டாளி பிங்கி இரானி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸ் இதுவரை குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.