திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா அடுத்த கண்ணாவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது விமான நிலையம் அருகே பெண் ஊழியரின் பைக்கை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் பைக்கை விட்டு இறங்கி கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார்.
உங்களைப் போன்றவர்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது. எதற்காக என்னை வழிமறித்து சில்மிஷம் செய்தாய் என கேட்டவாறு நடுரோட்டில் வைத்து தாக்கினார்.
வலி தாங்காமல் அந்த வாலிபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். அதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோவை பார்த்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வசி ரெட்டி பத்மா பெண்களை சீண்டுபவர்களுக்கும், சில்மிஷத்தில் ஈடுபடுவர்களுக்கும் இது போன்று பாடம் புகட்டுவது சரியே, இதுபோன்ற செயல்களில் பெண்கள் துணிச்சலாக ஈடுபட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.