உள்ளூரில் துரத்தப்பட்ட புஜாரா; இங்கிலாந்தில் ஹாட்ரிக் சதம்!

Cheteshwar Pujara Tamil News: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியா முத்திரையை பதிவு செய்தவர் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 அரைசதம், 18 சதம், 3 இரட்டை சதங்களுடன் 6713 ரன்களை குவித்துள்ளார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 43.88 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 44.25 ஆகவும் உள்ளது.

இந்திய அணியில் இருந்து ஓய்வு

இந்திய டெஸ்ட் அணியில் தவறாமல் இடம்பிடித்து விடும் புஜாரா, கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். அங்கு நடந்த 3 டெஸ்ட் ஆட்டங்களிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடன் சிறப்பான ஜோடியை மிடில்-ஆடரில் அமைக்கும் ரஹானேவும் சொதப்பி இருந்தார். போதாக்குறைக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலியும் சதமடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த மும்மூர்த்திகளின் பெயர் அடிபட ஆரம்பித்தது.

குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் நல்ல அனுபவம் கொண்ட மூத்த வீரர் புஜாரா பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவரின் பேட்டிங் பாணி குறித்து ‘நேற்று கிரிக்கெட் கற்றுக்கொண்டவர்கள் எல்லாம்’ ஏளனமாக பேசினர். கண்டன்ட் கிடைத்து விட்டது என பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இதனால் புஜாரா மனமுடைந்தாரோ இல்லையோ, அவரை நேசிக்கும் ரசிகர்களும், அவரைப் பிடித்தவர்களும் மனம் நொந்தனர்.

‘எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினால் போல்’ இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தது புஜாராவை கழற்றி விட்டனர். ஏற்கனேவே மடைமுனடைந்த அவரது ரசிர்களுக்கு இந்த செய்தி பெரும் இடியாக விழுந்தது. அவரின் டெஸ்ட் பயணம் அவ்வளவு தான் என்றும், விரைவில் அவர் ஓய்வை அறிவிப்பார் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் ஹாட்ரிக் சதமடித்த புஜாரா

இந்நிலையில், தன்னைப்பற்றி பக்கம் பக்கமாய் எழுதியவர்களுக்கும், தங்களின் மோசமான விமர்சனங்களால் துரத்திய அந்த மாமனிதர்களுக்கும் தனது சிறப்பான மட்டை சுழற்றலால் பதிலளித்து இருக்கிறார் புஜாரா. தற்போது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் கவுண்டி (உள்ளூர் டெஸ்ட் தொடர்) கிரிக்கெட் தொடரில் “சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்” அணிக்காக விளையாடி வரும் அவர் ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஏப்ரல் 14 முதல் 17 வரை நடந்த டெர்பிஷயர் – சசெக்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலாவது இன்னிங்ஸில் புஜாரா 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து நடந்த 2வது இன்னிங்ஸில் களமாடிய அவர் இரட்டை சதத்தை பதிவு செய்தார். மேலும், அவர் 387 பந்துகளில் 23 பவுண்டரிகளை துரத்தி 201 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தை புஜாராவின் சசெக்ஸ் அணி ட்ரா செய்தது.

ஏப்ரல் 21முதல் 23 வரை நடந்த போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் – சசெக்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தனது 2வது சதத்தை பதிவு செய்த புஜாரா 206 பந்துகளில் 16 பவுண்டர்களை விளாசி 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 28ம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சசெக்ஸ் – டர்ஹாம் அணிகள் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய வீரர் புஜாரா தனது ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்து விளையாடி வருகிறார். நாம் அவர் குறித்து எழுதும் இந்த தருணத்தில் 297 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 186 ரன்களை குவித்துள்ளார்.

ஹாட்ரிக் சதம்; வைரல் வீடியோ

மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா ‘சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்’ அணியில் இணைந்து முதல் அவரை அந்த அணியின் நிர்வாகம் மற்றும் அணி வீரர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தற்போது அவர் அந்த அணிக்காக ஹாட்ரிக் சதம் அடித்துள்ளது அவர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. புஜாரா ஹாட்ரிக் சதம் பதிவு செய்த வீடியோக்களை தற்போது சசெக்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.