திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளையும், தற்போது நடைபெற்று வரும் பணிகளையும் பட்டியலிட்டு அவர் பேசியதாவது:-
நான் அறிவிப்பு செய்கிறேன் என்றால், அந்த அறிவிப்பைச் செயல்வடிவம் கொடுத்து நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவேன். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஏதோ அறிவித்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைக்காதீர்கள். அறிவித்த திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி வாராவாரம் அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடத்தில், ஏன், இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கோட்டையில் என்னுடைய அறையிலேயே ஒரு போர்டு வைத்திருக்கிறேன். அதன் பெயர் Dash Board. அந்த Dash Board எதற்கு என்று கேட்டீர்கள் என்றால், என்னென்ன திட்டங்களை நாம் அறிவித்திருக்கிறோம், அந்தத் திட்டங்கள் எப்போது தொடங்கியிருக்கிறது, அது எந்தெந்த நிலையில் இருக்கிறது என்பது நான் கோட்டையிலே முதலமைச்சர் அறையில் உட்கார்ந்துகொண்டே பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு வசதியை செய்து வைத்திருக்கிறேன். எனவே, யாரும் அதிலிருந்து தப்பி விட முடியாது, அதில் நான் உஷாராக இருப்பேன். அதை தினந்தோறும் நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் – வேறு எந்த மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் – திட்டத்தை அறிவித்ததோடு நம் பணி முடிந்துவிட்டது என்று அமைதியாக இருந்துவிட மாட்டேன். திட்டத்தின் பயனை மக்கள் அடையக்கூடிய வகையில் அதை தொடர்ச்சியாக நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன்.
மாநிலங்களின் அரசியல் உரிமைகளை – மாநிலங்களின் நிதி உரிமைகளை -மாநிலங்களின் சட்ட உரிமைகளைப் பறித்துவிடுவதன் மூலமாக மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மாநிலங்களை முடக்குவதாக நினைத்து, மக்களை முடக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதுதான் மாநிலங்களுடைய உரிமை. அதை மாநிலங்கள்தான் செய்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.