RR v MI : 9 -வது போட்டியில் மும்பைக்கு முதல் வெற்றி; தோல்வியைத் தேடிக்கொண்ட ராஜஸ்தான்!

கால்குலேட்டரைத் தேடவைக்கும் ஆர்சிபி, தோனியின் கைக்குத் திரும்பியிருக்கும் சிஎஸ்கே கேப்டன்ஷிப், ஐபிஎல்லின் முதல் கோப்பையை வார்னே கையிலேந்திய அதே மைதானத்தில் அவருக்கான நினைவேந்தல் என கவன ஈர்ப்பு நாளாக மாறியிருந்தது. அதனைத் தாண்டியும் ஆர்வமேற்றியது மும்பை – ராஜஸ்தான் மோதல். பட்லரின் மும்பைக்கு எதிரான ஏகாதிபத்தியத்தை இன்னமும் ஒருமுறை ரசிக்கலாம் என‌ ராஜஸ்தான் ரசிகர்கள் குதூகலமாக, ரோஹித்தின் பிறந்த நாளிலாவது, முதல் வெற்றி பரிசாகுமா என்பதே மும்பையின் ஏக்கமாக இருந்தது. இதுவரை எந்த ஐபிஎல் அணியும் தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் தோற்றதில்லை. அந்த அவமானத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதிலும் மும்பைக்கு முனைப்பிருந்தது.

பொதுவாக, வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியை கேட்ச் டிராப்கள் என்னும் பெருங்குற்றங்கள் தீர்மானிக்கும். அந்தத் தவறோடுதான் மும்பை தொடங்கியது. பும்ராவின் பவுன்சரில் போக வேண்டிய பட்லருக்கு, சாம்ஸ் பவுண்டரி லைனுக்கு அருகில் இருந்து மறுவாழ்வளித்ததோடு, அணியின் அழிவிற்கும் அச்சாரமிட்டார். அடுத்த ஓவரிலோ, படிக்கல்லுக்கு சாம்ஸ் வீசிய ஷார்ட் பாலை டீம் பேக்வேர்ட் பாயிண்டில் இருந்த டிம் டேவிட் கோட்டை விட்டு பவுண்டரிக்கு வழியனுப்பினார்.

RR v MI

அடித்த அந்த ஹாட்ரிக் பவுண்டரியைத் தவிர்த்துப் பார்த்தால், படிக்கல்லின் ஆட்டமும் பரபரப்பாக இல்லை, பட்லரும் அதிரடி ஆரம்பம் தரவில்லை. பவர்பிளேவில், 40/1 என வெகு சுமாரான தொடக்கமாகவே அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் செய்ய முடியாததை, லாங் ஆஃபில் கேட்ச் பிடிக்கப்பட்ட ஆஃப் ஸ்பின்னரின் பந்து செய்தது. ஐந்தாவது ஓவரிலேயே ஹ்ரித்திக்கை நம்பி ரோஹித் கொண்டுவர படிக்கல்லினை அவர் வெளியேற்றினார். வர்ண ஜாலம் காட்டிய சாம்சனின் ஆட்டமும் வெகுநேரம் நீடிக்கவில்லை. மூன்று ஓவரில் முறிந்த அடுத்த பார்ட்னர்ஷிப்பில், ஹ்ரித்திக்கின் ஓவரில் சாம்சன் பறக்கவிட்ட அந்த இரு சிக்ஸர்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்தது. கார்த்திகேயா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய ஷார்ட் பாலுக்கு, தனது விக்கெட்டை தானமளித்தார் சாம்சன். கேப்டன் இன்னிங்ஸ்களை மறந்து, கேமியோ இன்னிங்ஸ்களை மட்டுமே அவரது பேட் பார்த்து வருகிறது.

அங்கிருந்து அடுத்த சில ஓவர்கள், மும்பையின் அட்டாக், சற்றே தீவிரமடைந்தது. ரன்களை வாரி வழங்கவில்லை. பட்லர் – மிட்செல்லை ஆதிக்கம் செலுத்தவும் விடவில்லை. மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக மும்பை பந்துவீச 9-15 ஓவர்களில், 35 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானின் ரன்வங்கியில் சேர்ந்தது. குறிப்பாக கார்த்திகேயா அதில் மூன்று ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே தந்திருந்தார். குட் லெந்த்தில் வந்த சாம்ஸின் ஸ்லோ பால் தள்ளாடிக் கொண்டிருந்த மிட்செலை 17 ரன்களோடு வெளியேற்றியது. ஆறு ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 100 ரன்கள் கூட வராதது, மும்பையை சற்றே ஆசுவாசப்படுத்தியது. ஆனால் பட்லரது பேட்டுக்கு எவ்வளவு நேரம் விலங்கிட முடியும்? நாலாபுறமும் சுற்றப்படக் காத்திருந்த பேட்டுக்கு, ஹ்ரித்திக்கின் ஓவரில் வந்து சேர்ந்த முதல் நான்கு பந்துகள் இரையாகின. 46 பந்துகளில், 43 ரன்கள் என வேற்று கிரகத்தில் ஆடிக் கொண்டிருந்த பட்லரது ஸ்ட்ரைக் ரேட்டை முடுக்கிவிட்டன அந்த நான்கு பந்துகள். லாங் ஆனில் தொடங்கி, லாங் ஆஃப் வரை என நான்கு சிக்ஸர்களில், மும்பைக்கு மரணபீதியை பட்லர் புயல் காட்ட, அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது; ஆரஞ்சுக் கேப்பை மறந்தும் கூடக் கழற்றக் கூடாதென்பதில் தீவிரமாக உள்ளார் பட்லர். எனினும் அந்த ஓவரில், ரவுண்ட் த விக்கெட்டில் வீசப்பட்ட ஹ்ரித்திக்கின் இறுதிப்பந்து, பட்லரை வெளியேற்றி புளகாங்கிதமடைந்தது.

RR v MI

இறுதி நான்கு ஓவர்களில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தமேற்றி, 32 ரன்களை மட்டுமே கொடுத்து, 158 ரன்களோடு ராஜஸ்தானின் இன்னிங்ஸை முடித்து வைத்தது மும்பை. அஷ்வினின் கடைசி கட்ட அதிரடி இல்லாமல் போயிருந்தால், ராஜஸ்தான் இன்னமும் குறைவான இலக்கையே நிர்ணயித்திருக்கும். “நாங்கள் ஆடிய பிட்ச்களில், இது மிக ஸ்லோவாக இருக்கிறது”, என ராஜஸ்தானின் துணைப் பயிற்சியாளர், கூறியிருந்தார். 48 பந்துகளில் வந்து சேர்ந்த பட்லரது அரை சதத்தைவிட, இதற்கு வேறென்ன சாட்சியம் வேண்டும்?! எனவே இலக்கை எட்டுவதும், அதுவும் ராஜஸ்தானின் பௌலிங் படை பலத்தை மீறி, அதனை எட்டுவதும், மும்பைக்கும் சவாலாகத்தான் இருக்கப் போகிறது என்பதே ஆரம்பகட்ட அறிகுறியாக இருந்தது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போன போட்டியில் விட்ட இடத்திலிருந்து, போல்ட் தொடருவாரா, பட்லரைப் போல், மும்பைக்கு எதிராக வஞ்சம் தீர்த்துக் கொள்வாரா என்றெல்லாம் ரசிகர்கள் மனதில் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழ, இஷான் கிஷன், அதிரடியாக போல்டின் ஓப்பனிங் ஓவரை, பவுண்டரி சிக்ஸரோடு வரவேற்றார். அடுத்து வந்த பிரஷித்துக்கும் அதுவே நேர்ந்தது. சரி, வேகப்பந்து வீச்சுக்கு எதிராகத்தானே வாளைச் சுழற்றுவார் என, இடக்கை ஆட்டக்காரரான அவரை வீழ்த்த, மூன்றாவது ஓவரிலேயே, அஷ்வினைக் கொண்டு வந்தார், சாம்சன். ஆனால், இஷானுக்கு பதிலாக ரோஹித்தின் விக்கெட்டை அது விழவைத்தது. ஒன்பது போட்டிகளில், 17 ஆவரேஜோடு பதற வைக்கிறது ரோஹித்தின் தற்போதைய ஃபார்ம். இந்த சீசனில், அவர் அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோரே 41 என்பதுதான், வேதனை தரும் உண்மை. நோஹிட் ரோஹித்தாகவே இந்த சீசன் முழுவதும் அவர் வலம் வருகிறார்.

இஷானது நோக்கமோ பவர்பிளேவைப் பயன்படுத்தி ரன்குவித்து விடுவதாகவே இருந்தது. ஃபுல் லெந்த்தில் வந்த பிரஷித்தின் பந்துகள் நிரம்பவே அடிவாங்கின. பிட்ச் மிக ஸ்லோவாக, அஷ்வினது ஓவர்கள் முடிக்கப்படும் சாத்தியக்கூறுகள் தலைதூக்கியது. ஆனால், பவர்பிளேவுக்கு உள்ளாகவே, அடுத்த ஸ்பெல்லுக்கு போல்டை சாம்சன் கொண்டுவரும் போதே ஷார்ட் பால்கள் அணிவகுத்து, விக்கெட்டுக்கான வலை பின்னும் என்ற எண்ணம் எழுந்தது. அதே போல்தான், இஷானின் விக்கெட்டும் விழுந்தது. பவர்பிளே முடிவில், 41/2 என ஏறக்குறைய ராஜஸ்தான் இருந்த சூழலில்தான் (40/1) மும்பையும் இருந்தது. அந்த நிலையில் இருந்து, வடம்பிடித்து மும்பையை முன்னோக்கி எடுத்துச் சென்றது. அவர்களது நீண்ட கால மீட்பரான சூர்யக்குமாரும், இந்த சீசனின் சென்ஷேனான திலக் வர்மாவும்தான். விக்கெட்டுக்குப் பின்பு வந்த மிட்செலின் ஒரு ஓவரில் மட்டும்தான், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்களை துணிகரமாக அடித்து பிரஷரை ராஜஸ்தானின் பக்கம் திருப்பி விட்டனர். அதன் பிறகு வந்த ஓவர்களில் கிரவுண்டட் ஷாட்களே அதிகம் இருந்தன. ஓடி ரன் சேர்ப்பதிலும், தேவைப்படும் ரன்ரேட் எகிறாமலும் விக்கெட் விழாமலும் பார்த்துக் கொள்வதிலும்தான் அவர்களது கவனம் இருந்தது. பவர்பிளேயில், 6.3 ஆக இருந்த ரன்ரேட் 7-12 இடைவெளியில், 9 ஆக இருந்தது. அதிலும் சூர்யக்குமாரின் இன்னிங்ஸ் முழு கட்டுப்பாட்டோடும் கவனத்தோடும் கட்டமைக்கப்பட்டது. 36 பந்துகளில், அரைசதம் கடந்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக மாறினார்.

RR v MI

மும்பையின் முதல் வெற்றி கண்ணுக்குத் தென்பட ஆரம்பித்த சமயத்தில்தான், போட்டியின் ட்விஸ்ட் தரும் இரட்டைத் தாக்குதல்கள் நடந்தேறின. அடுத்தடுத்த ஓவர்களில், சஹாலின் பந்தில் சூர்யக்குமாரும், பிரஷித்தின் ஃபுல் லெந்த் பந்தில் திலக்கும் வெளியேறினர். பராக் பிடித்த அந்த இரண்டு கேட்சுகளும், மறுபடியும் மும்பைக்கு மூடுவிழா நடத்த முயற்சித்தன.

28 பந்துகளில், 37 ரன்கள் என்ற எளிய இலக்கு பொல்லார்ட் – டிம் டேவிட் கூட்டணிக்கு முன் நின்றது. பொல்லார்ட் ஒருவராகவே அடிக்கக்கூடிய ஸ்கோரென்றாலும், டிஃபெண்ட் செய்வதில் பராக்கிரமம் காட்டிவரும் ராஜஸ்தான் அவ்வளவு சுலபமாகப் பணியாது, போட்டி கடைசிப் பந்து வரை கொண்டு செல்லப்படும் என அனுமானிக்கப்பட்டது.

பொல்லார்ட் ரன்னெடுக்கத் திணற, முழுப் பொறுப்பையும் டிம் டேவிட் எடுத்துக் கொண்டார். சஹாலின் கூக்ளிக்கு ஹாய் சொன்ன சிக்ஸரும் குல்தீப் சென்னின் ஓவரில் வந்த அடுத்தடுத்த இரு பவுண்டரிகளும் பதற்றத்தைத் தணிக்க முயன்றன.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் போல்டுக்கு பதிலாக, குல்தீப்பை சாம்சன் பந்துவீச வைக்க முதல் பந்திலேயே, பொல்லார்ட் ஆட்டமிழந்தார். அடுத்து என்ன நேருமோ, மும்பையின் துரதிர்ஷ்டவசம் மறுபடியும் கண்விழிக்குமோ என்றெல்லாம் யோசனை எழும் முன்னரே டேனியல் சாம்ஸ் வேறு சாய்ஸே தராமல், சிக்ஸரை வின்னிங் ஷாட்டாக்கினார். ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்பதாவது போட்டியில் புள்ளிப் பட்டியலில் தனது முதல் கணக்கைத் தொடங்கியது மும்பை.

RR v MI

டாப் பொஷிசனில் மட்டுமே கவனம் வைத்திருக்கும் ராஜஸ்தானுக்கு, இது ஏமாற்றமானதாக அமைந்திருக்கிறது என்றாலும், நாக் அவுட் போட்டிகளுக்கு முன்னதாக லீக் சுற்றளவில் இத்தகைய தோல்விகள் அவர்கள் தங்களை சுயப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.

மறுபுறமோ, பொதுவாக இந்தச் சமயத்தில் பிளே ஆஃபுக்கு இன்னமும் எத்தனை வெற்றி வேண்டும் என கணக்குப் போட்டுப் பழகிய மும்பைக்கு சீசனின் முக்கால்வாசி கடந்த பின் கிடைத்த முதல் வெற்றி தரும் அனுபவம் புதிதாகத் தெரிகிறது. உணர்வுப் பூர்வமாக, மிக நெகிழ்வான தருணமாக இது மும்பையின் பயணத்தில், என்றும் எழுதப்பட்டிருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.