லீவ், : “உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகள் துவங்கியது முதல், அங்கிருந்து, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் வெளியேற்றி உள்ளோம்,” என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.தற்போது, நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மட்டும் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, கீவ் நகரின் புறநகரில் அமைந்துள்ள புச்சா பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், மூன்று பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுவரை, 1.1 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியேறி உள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா., அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே உக்ரைனில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருவதாக, ரஷ்ய படையினர் மீது உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.சீன செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகள் துவங்கியது முதல், அங்கிருந்து, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் வெளியேற்றி உள்ளோம். அதில் சீன நாட்டினர், 300 பேரும் அடங்குவர்.ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.
எனினும் இந்த பேச்சில் நேர்மறையான வளர்ச்சி ஏற்படுவது என்பது சுலபமானது அல்ல. இந்த பேச்சை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் எடுத்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.உக்ரைனில் இருந்து, 10 லட்சம் மக்களை வெளியேற்றியதற்கான ஆதாரங்கள் எதையும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் அழைத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று பேசினார். அதில், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவுவதாக, பிரான்ஸ் அதிபர் வாக்குறுதி அளித்தார்.உயிர் தியாகம் செய்த வீரருக்கு விருதுஉக்ரைனில் போர் துவங்கியது முதல், மேஜர் ஸ்டீபன் டாராபாகா, 29, என்ற உக்ரைன் விமானப் படை வீரர், ரஷ்யாவின் போர் விமானங்களை சாமர்த்தியமாக எதிர்த்து தாக்குதல் நடத்தி வந்தார்.
‘மிக் – 29’ ரக போர் விமானத்தின் வாயிலாக தாக்குதல் நடத்தி, 40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தி உள்ளார்.இந்நிலையில், மார்ச் 13ம் தேதி, அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அவர் உயிரிழந்தார். அவரை கவுரவிக்கும் வகையில், வீர தீர செயல்களுக்காக, உக்ரைனில் வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, ‘தி ஆர்டர் ஆப் தி கோல்டன் ஸ்டார்’ விருது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.