புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு 10 மாநிலங்களுக்கு நியமிக்கப்பட உள்ள ஆளுநர் பதவியை பிடிக்க, பாஜ.வில் இப்போதே மேலிடத்தில் ஆள் பிடிக்கும் வேலையில் பல தலைவர்கள் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலையிலும் , இதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலமும் முடிய உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜ.வின் பலத்தையும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் களமாக இத்தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்குப் பிறகு காலியாக உள்ள 10 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 2024 மக்களவை தேர்தலை சந்திக்க பாஜ வகுக்க உள்ள வியூகத்தை அடிப்படையாக கொண்டே இந்த பதவிகள் நிரப்பப்படும் என கருதப்படுகிறது. கடந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதேபோல் இந்த முறையும் பல ஆளுநர்களின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பாஜ.வின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான வேட்பாளர்கள் தேர்வில் பாஜ ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட உள்ள ஆளுநர் பதவிகளை பிடிக்க, பாஜ தலைவர்களிடையே இப்போதே போட்டி நிலவுகிறது. தங்களுக்கு வேண்டிய மேலிட தலைவர்களை பிடித்து, பதவி கேட்டு வருகின்றனர். இவர்களில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் ஒருவர். இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால், பீகார் மூத்த தலைவர் சிபி தாக்கூர் ஆகியோரின் பெயர்களும் ஆளுநர் பட்டியலில் உள்ளன. அதேபோல், தென்மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களும் அடிபடுகின்றன.* அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் ஆளுநர்கள், அந்தமான் மற்றும் நிகோபார் துணைநிலை ஆளுநரின் பதவிக் காலம் வரும் செப்டம்பர், அக்டோபரில் முடிகிறது. இந்த மாநிலங்களில் தற்போது முறையே, ஜெகதீஷ் முகி, பி.டி.மிஸ்ரா, கங்கா பிரசாத், டி.கே.ஜோஷி ஆகியோர் ஆளுநராக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் அக்டோரில் முடிகிறது. * மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்கின் பதவிக் காலம் செப்டம்பரில் முடிகிறது. * தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக உள்ளார். அந்த பதவியும் காலியாக உள்ளது. * பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரத்தின் பதவிக் காலம் முடிந்த நிலையில், அவர்களுக்கு 2வது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. * டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதால், 2வது முறையாக பணியாற்றி வருகிறார். சத்யபால் மாலிக் தொடர்வார்மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிற பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக ஒன்றிய அரசையும், பாஜ.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவர் தனது பதவிக்காலம் முழுவதும் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சி மாநிலங்களில் சுமூகமான ஆளுநர்கள்எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்படும் அரசியல் மற்றும் நிர்வாக குழப்பங்களை தவிர்க்க, சுமூகமான ஆளுநர்களை நியமிப்பது பற்றியும் பாஜ ஆலோசித்து வருகிறது.