சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேமா ஜூவாலினி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரர் காவல்துறை மீதுதான் குற்றம்சாட்டுகிறாரே தவிர தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை.
மேலும், கடந்த 1987-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளின்போது உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாக வாதிட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் சோதனை நடத்தியதில் சட்ட விரோதம் இல்லை என தெரிவித்துள்ளார். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி ஹேமா ஜுவாலினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.