புதுடெல்லி:
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆத் ஆத்மி கட்சி அடுத்த கட்டமாக பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் களம் இறங்க திட்டமிட்டு வருகிறது.
மேலும் இமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட அந்த கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த பேரணியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சூரத் நகரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசுகிறார்.
குஜராத் மாநில சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், குஜராத் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அந்த கட்சி திட்டமிட்டு வருவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத் சட்டசபையை கலைத்துவிட்டு குஜராத் தேர்தலை அடுத்த வாரம் பாஜக அறிவிக்கப் போகிறதா? ஆம் ஆத்மியை பார்த்து இவ்வளவு பயமா? என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்..
. பஞ்சாப் கலவரம் எதிரொலி – மொபைல், இணையதள சேவைகள் முடக்கம்