புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசை விமர்சித்து 108 மாஜி ஐஏஎஸ்.கள் கடிதம் எழுதிய நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பு அதிகாரிகள் திறந்த மடல் அனுப்பி உள்ளனர். ‘பாஜ ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என 108 மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலடியாக ‘அக்கறையுள்ள குடிமக்கள்’ என தங்களைக் கூறிக் கொண்ட மாஜி அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு திறந்த மடல் அனுப்பி உள்ளனர். 8 முன்னாள் நீதிபதிகள், 97 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், 92 முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.அதில், ‘பாஜவின் சமீபத்திய தேர்தல் வெற்றியையும், பிரதமர் மோடியின் பின்னால் வலுவான மக்கள் ஆதரவு இருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத விரக்தியின் வெளிப்பாடே எதிர் குழுவினரின் கடிதம் பிரதிபலிக்கிறது. அவர்களின் கோபமும், வேதனையும் போலியானது மட்டுமல்ல, தற்போதைய அரசுக்கு எதிராக தவறான எண்ணங்களை விதைத்து, வெறுப்பை ஏற்படுத்தவே வெறுப்பு அரசியலை தூண்டுகிறார்கள். பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பல வன்முறைச் சம்பவங்கள், ஏழைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் விஷயங்களில் எதிர் குழுவினர் எந்த எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? இந்துப் பண்டிகைகளின் போது நடைபெறும் அமைதி ஊர்வலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை வளர்ப்பதே அவர்களின் உண்மையான நோக்கம். இரட்டை நிலைப்பாட்டை கொண்ட அவர்கள் சிக்கல்கள் இல்லாதவற்றில் சிக்கலை உருவாக்க நினைப்பவர்கள்’ என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.