திருமலை: மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டப்பட உள்ளது. இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி மதிப்பிலான 10 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாவிடம் நேற்று வழங்கினார்.இதில், பங்கேற்ற ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் சஞ்சீவ் சரின் பேசுகையில், ‘‘ரேமண்ட் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கவுதம் சிங்கானியா மகாராஷ்டிர மாநில அரசு வழங்கிய நிலத்தில் கோயில் கட்ட ரூ.50 கோடி முதல் ரூ.60 ஆனாலும் முழு செலவையும் ஏற்று கொள்ள உள்ளது,’’ என்றார். நவி மும்பையில் உள்ள உல்வேயில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியதற்காக மகாராஷ்டிர மாநில அரசுக்கும், வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்க முன் வந்ததற்காக ரேமண்ட் தலைவர் கவுதம் சிங்கானியாவிற்கு அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நன்றி தெரிவித்தார். அப்போது, தலைமை செயல் அதிகாரி ஜவகர் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி தர்மா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.