சென்னை: தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 28-வது முகாமில் 12.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 27 மெகா கரோனாதடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. 93 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்ததால் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்ற உத்தரவு கடந்த மாதம்தொடக்கத்தில் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோர் எண்ணிக்கை குறைந்ததாலும், மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், டெல்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் தினசரி தொற்றுபடிப்படியாக அதிகரித்து வருகிறது.சென்னை ஐஐடியில் இதுவரை 182பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெகா தடுப்பூசி முகாம்களை மீண்டும் நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 28-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்றுநடைபெற்றது. இதில் முதல் மற்றும்,2-ம் தவணை, மற்றும் பூஸ்டர் தவணைதடுப்பூசிகளை ஏராளமானோர் செலுத்திக் கொண்டனர். அந்த வகையில் 12 லட்சத்து 25,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மே 8-ம் தேதி தமிழகம் முழு வதும் 1 லட்சம் இடங்களில் சிறப்புமெகா கரோனா தடுப்பூசி முகாம்கள்நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.