“அக்கா குருவி’’யாகத் தமிழில் வருகிறது “சில்ட்ரென் ஆப் ஹெவன்’’. உலகத் திரைப்பட வரிசையில் “சில்ட்ரன் ஆப் ஹெவன்’’ திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிற பழக்கத்தை வைத்திருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் நாம் சந்தித்த வாழ்வியல் முறையை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும் அதிசயத்தை நான் உணர்வேன்.
வறுமையின் வடிவங்கள் இயல்பானவை. காலத்தின் வேகம் அளவிட முடியாதவை. ஆனால் கடந்த கால நினைவுகளின் தாக்கம் நம் இதய வலிகளை ஆறுதல் படுத்த உதவும்.
பகையைப் பொறுத்துப் போகச் சொல்லிய தாயின் அறிவுரைகள், நட்புக்கு எல்லையை வரையறுக்க மறுத்த விளையாட்டுப் போட்டிகள் ஆகியன பருவ ஈர்ப்பை அறியத் தெரியாச் சிறுவர் பருவத்தில் பழகியிருந்த நற்பண்புகள்.
நம்மை அந்த முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கிற அழியாச் செயலைச் செய்கிற திரைப்படங்களில் ஒன்று தான் சில்ட்ரன் ஆப் ஹெவன்.
இந்தியத் திரைப்பட உலகில் நாம் சந்திக்க மறுக்கும் உண்மையையும் எதார்த்தத்தையும் உலகத் திரைப்படங்கள் நம் கண் முன்னே காட்சிப்படுத்தும் வல்லமையோடு திகழ்கின்றன.
பசங்க, காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள் நம்மை வியக்க வைத்தாலும் சிறு சிறு வணிக உடன்பாடுகளுக்காக அவை போன்ற படங்களின் இறுதிக் காட்சிகள் கதாபாத்திரங்களின் வெல்லுதலிலேயே முடியும். ஆனால் நம் உண்மையாக நிகழ்வுகளில் பல்வேறு காலகட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருப்போம். அந்தத் தோல்விகளில் நம்முடைய போராட்டமும் அயராத உழைப்பும் பயன்தராமல் போயிருக்கும்.
“இத்திரைப்படத்தின் எட்டு வயது கதாநாயகன் தான் விரும்பிய போட்டியில் வெற்றி பெறுகிறான். ஆனால் அந்த வெற்றியே அவனது கனவை நிறைவேற்றுவதற்குப் பயன் தராமல் போகிறது. “ இதை ஏற்கிற மனநிறைவை அந்தச் சிறுவன் பெற வேண்டும் என்ற வாழ்த்த வேண்டிய நெஞ்ச அலையை நாம் பெறுவதில் தான் அந்தத் திரைப்படத்தின் வெற்றி அமைகிறது.
“துன்பம் என்பது மனித வாழ்வியலின் தவிர்க்க முடியாத நிகழ்வு, அதைத் தவிர்ப்பதற்காகக் குறுக்கு வழிகளைப் பின்பற்ற நினைக்கும் போது தான் ஆசை உருவாகிறது. அந்த ஆசை தான் இன்னொரு துன்பத்திற்குக் காரணமாகிறது” என்கிற புத்தரின் நிலைநிறுத்தப்பட்ட தத்துவத்தை மனிதர்கள் புரிந்து கொள்ள மறுப்பதால் தான் அடுத்தடுத்த மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.
எதார்த்த வாழ்வில் குறுக்கு வழியை மேற்கொள்ளாமல் இயல்பான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதனால் வெற்றியோ தோல்வியோ எது நிகழ்ந்தாலும் அதை ஏற்கிற மனநிலையே நம்மை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
அண்ணன், தங்கை பாசம், அம்மாவின் தாய்மைத் துன்பம், அப்பாவின் வறுமைப்பணிகள், நட்புத் தூய்மை இவற்றை மெல்லிய பட்டு நூல்களாக்கிப் பிய்ந்து போன காலுறைகள், பரிசாகக் கிடைத்த எழுதுகோல், பழுதடைந்த மிதிவண்டி, கடைசியாகக் கிடைக்கும் பரிசுக் கோப்பை இவற்றை மட்டுமே நெய்தல் கருவிகளாக்கி ஒரு சிறந்த படமாக உருவாக்கியிருப்பார் ஈரானிய இயக்குநர் மஜித் மஜித்.
அந்தத் திரைப்படம் தற்போது அக்கா குருவி என்ற திரைப்படமாகத் தமிழில் வருகிறது என்பது மகிழ்வைத் தரக் கூடியது.
மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தைச் சாமி இயக்கியுள்ளார். இளையராஜா மூன்று பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.
சில்ட்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி இந்தத் தமிழ்த் திரைப்படத்தைப் பாராட்டிச் சொல்லியுள்ள வார்த்தைகள், “நாம் இந்தத் திரைப்படத்தை இந்தியாவிற்கு வந்து பார்க்க விரும்புகிறேன், இத்திரைப்படத்தின் இசை என்னை வசப்படுத்தியுள்ளது”
ஆம். நம் குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் திரைப்படமாக இது இருக்கலாம். மே 6 திரைப்பட வெளியீட்டிற்காகக் காத்திருப்போம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.