புதுடெல்லி: தீர்ப்புகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுவதை ஊக்கவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மாநில முதல்வர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் சாதாரண மக்களுக்கும் நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும். தீர்ப்புகள் என்பது சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும். புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும். தவிர நீதித்துறையின் உத்தரவாக அது தெரியாது.
மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது, பல நாடுகளில் நீதிமன்றங்களில் ஆங்கிலம், உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. மொழி என்பது நீதியை பெறுவதற்கு ஒரு வகையான தடையாக இருக்கிறது.
நீதியை எளிதாக வழங்குவதற்கு காலாவதியான சட்டங்களை மாநில முதல்வர்கள் ரத்து செய்ய வேண்டும். 2015-ம் ஆண்டில் பொருத்தமற்றதாக தோன்றிய சுமார் 1,800 சட்டங்களை கண்டறிந்து, அவற்றில் 1,450 மத்திய அரசின் சட்டங்கள் நீக்கப்பட்டன. ஆனால் மாநில அரசுகள் 75 சட்டங்களை மட்டுமே நீக்கியுள்ளன.
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் நீதி எளிதிலும், விரைவாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும் நீதித்துறை அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
விசாரணைக் கைதிகள் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பது தொடர்பான விசாரணைக்கு முதல்வர்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து, விசாரணைக் கைதிகள் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம். வாய்ப்புகள் இருந்தால் அந்த விசாரணைக் கைதிகளை ஜாமீனில் விடுவிக்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: “ஜனநாயகத்தின் முதல் 3 தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது லட்சுமண் ரேகையை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத் துறை நடக்கும்போது அந்த நிர்வாகத்தின் வழியில் ஒருபோதும் நீதித்துறை வராது.
நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளன. 10 லட்சம் பேருக்கு வெறும் 20 நீதிபதிகளே உள்ளனர். வழக்குகளை சமாளிக்க போதுமான நீதிபதிகள் இல்லை. இதற்கு தேவையான அளவுக்கான இடங்கள் உருவாக்கப்பட வேண்டும். சட்டக் கல்வியை அவரவர் தாய்மொழியில் கற்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் பேசினார். இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் இதில் பங்கேற்றனர்.