வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க காங். தலைவர்கள் விரைவில் உதய்பூரில் கூடிப்பேச உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.வும் முன்னேற்பாடுகளை கவனிக்க தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதற்காக சிறப்புக்குழு ஒன்றை அமைக்க அக்கட்சி தயாராகி வருகிறது.கடந்த சில நாட்களாக டில்லி பா.ஜ. தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
ஆலோசனை
கட்சியின் தேசிய தலைவர் நட்டா அமைப்புச் செயலர் சந்தோஷ் மூத்த தலைவர் முரளிதர் ராவ் உள்ளிட்ட பலரும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2024ல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார் செய்வது குறித்து அவர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த தயார் நடவடிக்கைகளில் முக்கிய இடம் பெறுவது பூத் கமிட்டி. இவற்றை அமைப்பதை பற்றித் தான் தலைவர்கள் தீவிரமாக விவாதித்து
உள்ளனர்.கீழ்மட்ட அளவில் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை பா.ஜ.வுக்கு ஓட்டுப் போட வைக்கும் பணியை மேற்கொள்ளப் போகும் இந்த கமிட்டிக்கு முக்கியத்துவம் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.பூத் கமிட்டிகளை அமைத்து அவற்றை பலம் பெறச் செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டவும் தேர்தல் பணிகளுக்கான முன்தயாரிப்புகள் குறித்து முடிவெடுக்கவும் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.உயர்மட்ட தலைவர்கள் பலர் அடங்கிய இந்த குழு பற்றிய விபரங்கள் ஓரிரு வாரங்களில் வெளியாகும். இந்தக் குழு தான் நாடு முழுதும் பயணம் செய்து தேர்தல் முன்னேற்பாட்டுக்கான பிரசாரத்தை
செய்யவிருக்கிறது.
இரண்டாவது கட்டம்
இதை பா.ஜ. தேசிய தலைவர் நட்டா விரைவில் துவக்கி வைக்கவிருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் எம்.பி.க் கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் இந்த பிரசாரம் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடக்கும்.
இறுதியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துடன் இந்த பிரசாரம் முடிவடையும். இந்த பிரசார திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரசார பயணக் குழுவை அமைப்பது முதற்கட்டம்.
பலவீனமான பூத்துக்கள் எவை என்பதை கண்டறிவது இரண்டாவது கட்டம். புதிய பிரசார யுக்திகளுடன் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவது மூன்றாவது கட்டம்.இந்த பயணத் திட்டத்தின் நோக்கமே பெருவாரியான பொதுமக்களுடன் கலந்து பேசி அவர்களிடம் பா.ஜ. ஆட்சியின் சிறப்புகளை கூறி ஓட்டுக் கேட்பது தான். அடுத்து பா.ஜ. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் நுாலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகள் ஆகியவற்றை வகை படுத்தும் பணிகளும் துவங்கியுள்ளன.
இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ப வியூகங்களை வகுப்பது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளவும் முக்கிய தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே 13,14,15 ஆகிய தேதிகளில் ‘நவ சங்கல்ப்’ என்ற பெயரில் காங்கிரசின் சிந்தனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.வின் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் தேசிய அரசியல் வட்டாரங்களை பரபரப்பாக்கி விட்டிருக்கிறது.
Advertisement