சென்னை: மே தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான சமூகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதை உறுதிசெய்வதற்காக, புதிய சாத்தியமான யோசனைகள், புதுமையானதொழில்நுட்பங்கள், தொலைநோக்குப் பார்வையுடன் அர்ப்பணிப்போடு கடின உழைப்பை நல்கஉறுதி ஏற்போம். இந்தியா தனதுவிடுதலையின் 100-வது ஆண்டைகொண்டாடும் 2047-ம் ஆண்டுக்குள், உலகத் தலைமையாக இந்திய தேசம் வெளிப்படட்டும்.
முதல்வர் ஸ்டாலின்: தொழிலாளர்கள் தமிழகத்தின், இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு. அவர்களது நலன் காக்கும் அரசாக தமிழகஅரசு எப்போதும் விளங்கும். தொழிலாளர்களின் உரிமைகள், நலனுக்குகேடயமாகவும், போர் வாளாகவும் திமுகவும், திமுக அரசும் எப்போதும் திகழும். தொழில் அமைதி மட்டுமே தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான அடித்தளமாக இருக்கும் என்பதை நித்தமும் நெஞ்சில் கொண்டு, தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கவும், மகிழ்ச்சி தவழவும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களது மேன்மைக்கு அடித்தளம் அமைத்த போராட்டங்களின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்படும் மே தின விழாவில்,உழைக்கும் தொழிலாளர்கள் வெல்க, வாழ்க என அதிமுகவின் அன்பை வாழ்த்து முழக்கங்களாக கூறி மகிழ்கிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தொழிலாளி – முதலாளி என்ற பேதம் நீங்கி, அனைவரும் பங்காளிகள் என்ற, தந்தை பெரியாரின் லட்சியம் வளர உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தொழில் வளர்ச்சிகுன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உரிமைக் குரல் எழுப்பும் நாளாக மே தினம் அமைய வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: இந்தியாவில் சுரண்டலற்ற சமூகத்தை அமைக்கவும், மதவெறி, சாதிவெறி சக்திகளை புறக்கணித்து, உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கவும், சமூக ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்தும் ஒன்றுபட்ட வலுமிக்கபோராட்டங்களை முன்னெடுக்கவும் உறுதியேற்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: அறிவியல் கருத்தாயுதம் தாங்கி, பகுத்தறிவுப் பாதையில் பயணித்து, கற்பித சாதி, மத, சனாதனக் கருத்துகளை முறியடித்து, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற தொன்மை மரபை முன்னெடுத்து, சமூக சமத்துவம் காண உறுதி ஏற்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:தொழிலாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகள், அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மே தினத்தை தொழிலாளர்களின் உரிமைத் திருநாளாக, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சமூகம் கொண்டாடி மகிழ்கிறது. மே தினம் கொண்டாடும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: உழைப்பவர்களே உயர்ந்தவர்கள். உழைப்பால் உயரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
சசிகலா: நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் எல்லா வளமும், நலனும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உடலாலும், அறிவாலும் உழைக்கும் யாருக்கும்,எந்த இடத்திலும் உழைப்புச் சுரண்டல் நிகழ அனுமதிக்காமல், உழைப்பவர்களுக்கே முதல் மரியாதை என்பதை உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார்,மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன், எம்.பி.க்கள் பாரிவேந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் மே தினவாழ்த்து தெரிவித்துள்ளனர்.