புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு போலி கணக்குகளில் பணத்தை அனுப்பிய வழக்கில், சீன செல்போன் நிறுவனமான, ‘ஷாவ்மி இந்தியா’வின் ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கி உள்ளது. லடாக் எல்லையில் சீனா வாலாட்டியதில் இருந்தே, இந்தியாவில் உள்ள அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான ‘ஷாவ்மி’யும் இந்த கண்காணிப்பு வளையத்தில் சிக்கியுள்ளது. சீனாவின் ‘ஷாவ்மி’ செல்போன் நிறுவனம். உலகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ‘ஷாவ்மி இந்தியா’ என்ற பெயரில் இது செயல்படுகிறது. கடந்த 2014 முதல் இந்தியாவில் இயங்கி வரும் இந்நிறுவனம், அதற்கு அடுத்த ஆண்டில் இருந்தே அமெரிக்காவை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கும், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கும், ‘ராயல்டி’ என்ற வகையில் பல ஆயிரம் கோடி பணத்தை பரிமாற்றம் செய்து வந்தது. இதன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அமலாக்கத் துறை, இதன் பணப் பரிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதில், வெளிநாடுகளுக்கு இது போலி கணக்குகளில் பணம் அனுப்புவது கடந்த பிப்ரவரியில் உறுதியானது. இதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் உலக துணை தலைவரான மானு குமார் ஜெயினிடம் கடந்த மாதம், பெங்களூருவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வங்கிகளில் உள்ள இந்த நிறுவனத்தின் ரூ.5551 கோடி டெபாசிட் தொகையை அமலாக்கத் துறை நேற்று அதிரடியாக முடக்கியது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் மீது வெளிநாட்டு பணப் பரிமாற்ற நிர்வாக சட்டத்தின் கீழ் (பெமா) பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீன செல்போன் நிறுவனத்தின் மீதான நடவடிக்கை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‘ராயல்டி’ என்ற பெயரில் நடந்த பணப் பரிமாற்றம்அமலாக்கத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாவ்மி இந்தியா நிறுவனம், இந்திய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் செல்போன்களையும், அது சார்ந்த இதர பொருட்களையும் மட்டுமே வாங்கி ‘எம்ஐ’ என்ற பெயரில் செல்போன் விற்று வருகிறது. ஆனால், செல்போன் வர்த்தகத்துடன் தொடர்பு இல்லாத அமெரிக்காவை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கும், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கும் ‘ராயல்டி’ என்ற பெயரில் ரூ.5551 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை இது அனுப்பியுள்ளது. இதற்கான உத்தரவு, சீனாவில் உள்ள ஷாவ்மி தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளது. பணத்தை அனுப்பும் போதும் வங்கிகளில் இந்த நிறுவனம் தவறான தகவல்களை கொடுத்துள்ளது. போலி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன. பணம் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கும், செல்போன் தயாரிப்பு, சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்றார்.