ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை புறப்பட்டுச் செல்கிறார். 8 நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்களை சந்திக்கும் பிரதமர் மோடி 25 நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
2022ஆம் ஆண்டில் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் பயணமாக நாளை புறப்பட்டுச் செல்கிறார். இந்த பயணத்தில் 7 நாடுகளைச் சேர்ந்த 8 தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஓலாப் ஷோல்சை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அங்கிருந்து டென்மார்க் செல்லும் பிரதமர் மோடி, பிரதமர் Mette Frederiksen சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து இந்தியா – நார்டிக் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இறுதியாக பாரீஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபராக 2-வது முறையாக தேர்வுபெற்றுள்ள இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கிறார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போருக்கு மத்தியில் பிரதமர் மோடியின் ஐரோப்பிய நாடுகள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சந்திப்பில் வர்த்தகம், வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் தொழில்நுட்ப இயக்கம், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஐரோப்பிய நாடுகளுடனான கூட்டாண்மையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் தமது சுற்றுப் பயணத்தில் 50 தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் அந்நாடுகளில் வாழும் இந்தியர்களுடனும் கலந்துரையாடுகிறார். 25 நிகழ்வுகளில் கலந்துவிட்டு 4ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.