நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்
மின்வெட்டு
பிரச்சினை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் தான் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 173 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 96 ஆலைகளில்
நிலக்கரி தட்டுப்பாடு
நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரி பற்றாக்குறை தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிரித்துள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர்
பிரல்ஹத் ஜோஷி
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோல் இந்தியாவின் உற்பத்தி ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 29 வரை 12 சதவீதம் அதிகரித்து, 1.7 மில்லியன் டன்னிலிருந்து 1.9 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி 1.6 மில்லியன் டன்னாக இருந்த இறக்குமதி, ஏப்ரல் 29 ஆம் தேதி 1.9 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தற்போது 72.50 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், அனல் மின் நிலையங்களில் 22.01 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உள்ளதாகவும் பிரல்ஹத் ஜோஷி கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.