புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போலி ஜோதிடராக மாறிவிட்டார் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில், “கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, தங்களுக்கு பிடிக்காதவர்களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடிப்பதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டும் என மோடி அரசை கேட்டுக் கொண்டேன். இப்போது, நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். மின் தட்டுப்பாட்டால் சிறுதொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்பட்டு வேலையின்மை அதிகரிக்கும்” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது முகநூல் பக்கத்தில், “சமீப காலமாக ராகுல் காந்தி போலி ஜோதிடராக மாறிவிட்டார். நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் என்ன நிகழும் என்பதை கூறுவதற்கு பதில், தனது கட்சி ஆட்சியில் இருந்தபோது நிலக்கரி துறையில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்தது, அதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என பதிவிட்டுள்ளார். -பிடிஐ