சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் உலக கால்நடை தினம் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்றுகொண்டாடப்பட்டது. இவ்விழாவில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலர் தென்காசி எஸ்.ஜவஹர், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் – செயலர் ஆர்.ஆனந்தகுமார், தென்சென்னை கூடுதல் ஆணையர் (சட்டம் ஒழுங்கு) என்.கண்ணன், டீன் ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஜெ.ராதாகிருஷ்ணன், ஆர்.ஆனந்தகுமார், என்.கண்ணன் ஆகிய மூவரும் கால்நடை மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து கரோனா பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. 70 சதவீத நோய்கள் கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
கரோனா பாதிப்பை பொருத்தவரை, முதல்வர் உத்தரவின் பேரில் தொடர்ந்து கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் இதுவரை 7,300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாதிப்பு 196 என்று இருந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. 30-ம் தேதி (நேற்று) பாதிப்பு 13 ஆக உள்ளது.
ஐஐடி மாணவர்கள் கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்கு வெளி மாநிலங்களுக்கு சென்றுவரும்போது பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஐஐடியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருப்பது ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
இப்போது ஐஐடியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அதேநேரம், வெளியில் யாருக்காவது பாதிப்பு இருந்து முகக் கவசம் அணியாமல் கூட்டமாக இருக்கும்போது அந்த நபர் மூலம்பரவல் ஏற்பட்டு எண்ணிக்கை உயரலாம்.
டெல்லியில் தற்போது கரோனா பாதிப்பு தினசரி 100-க்கு மேல் என்ற அளவில் இருந்து வருகிறது. அதோடு உயிரிழப்புகளும் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தை பொருத்தவரை உயிரிழப்புகளை குறைத்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.புதிதாக 49 பேருக்கு கரோனா
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 24, பெண்கள் 25 என மொத்தம் 49 பேர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,932 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,394 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகம் முழுவதும் 513 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,068 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 54 ஆகவும், சென்னையில் 35 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.