சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அழகு நிலைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்த உரிமையாளரை கடைக்குள் புகுந்து பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றிய பெண்ணுக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. பெண்கள் உடைமாற்றுவதை படம் எடுத்து வைத்துக் கொண்டு வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஆவேசத்துடன் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை சுற்றிவளைத்தனர்
கடையின் உரிமையாளர் ஜெயின் ஹித்தீஸ் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் போலீஸ் வருகிறது என்று பதற்றத்துடன் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க, முதலில் தீர்த்து விட்டு பேசுவோம் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் கடும் ஆவேசத்துடன் காணப்பட்டனர்.
அப்போது அவரது சட்டையை பிடித்து இழுத்த இளைஞர் ஓங்கி ஒரு அறை விட்டார், அடுத்த நொடியே மயக்கம் வருவது போல தலையை பிடித்துக் தரையில் அமர்ந்து அவர் நாடகமாட ஒரு பெண் வந்து அவரை காப்பாற்றுவது போல நடித்தார்
.
அவரை அடித்த இளைஞரோ, நாம் இவ்வளவு ஸ்ட்ராங்கா ? அல்லது அடிவாங்கிய இந்த ஆளு ரொம்ப வீக்கா ? என்று குழம்பியவாறே அங்கிருந்து நகர்ந்தார். மற்றவர்கள் அவரை திட்டியபடியே அடுத்த கட்ட தாக்குதலுக்காக அங்கு நின்றனர்.
காமுகன் ஹித்தீஸ் மீது அடுத்த அடி விழுவதற்குள்ளாக, சரியான நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் ஆவேசமாக இருந்த அந்த பெண்ணின் உறவினர்களை சமாதனப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர்.
அதற்குள்ளாக கடையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர், தனக்கு மயக்கம் வருவதாக கூறியதால் அவரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வெளியே வரட்டும் என்று ஏராளமானோர் ஆத்திரத்தில் காத்திருந்த நிலையில் , அந்தப்பெண் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் காமுகன் ஜெயின் ஹித்திசை கைது செய்த போலீசார் , முதலில் தங்களிடம் புகார் அளிக்காமல் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் அவரது கணவர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் கடை உரிமையாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.