பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்சினை இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட்டில் இந்திய பாதுகாப்பு துறைக்கான நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.4,78,195.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் ரூ.4.71 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2022-23ஆம் நிதியாண்டில் பாதுக்காப்புத்துறைக்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு ரூ.5,25,166,15 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு குறித்து கவலை தெரிவித்துள்ள பாதுகாப்பு நிலைக்குழு, இந்தியாவுக்கான அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் போதும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை விட இந்தியா செலவு செய்யும் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து மந்தமாகவே உள்ளது எனவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடப்படுவதாகவும் பாதுகாப்பு நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2021-22 நிதியாண்டில்
ஜிஇஎம்
மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் இதுவரை இல்லாத உயரளவாக ரூ.15,000 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் ஆர்டர்கள் அரசின் இணைய-சந்தை மூலம் இதுவரை இல்லாத அளவிலான ரூ.15,047.98 கோடியை எட்டியது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 250 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் மயத்தின் மூலம் பழைய ஒப்பந்தப்புள்ளி முறைகளை சீரமைக்கவும், அரசு கொள்முதல்களில் அதிக நன்னடத்தை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டு இந்த ஜிஇஎம் தொடங்கப்பட்டது. ஜிஇஎம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, பாதுகாப்பு அமைச்சகம் டிஜிட்டல் முறையைத் தழுவி இந்தப் பாதையில் முழுமையான உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவுடன் ஒத்துப்போகும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் அரசின் பார்வைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.